மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு: பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு
சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். துணை பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டம் காணொலி காட்சி வழியாக ஒருங்கிணைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து 3 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தி.மு.க.வில் காலியாக இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் அவர்கள் ஒருமனதாக அந்த பதவிகளுக்கு முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி கட்சியின் துணை பொதுச்செயலாளர்களாக மேலும் 2 பேரை நியமிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கட்சியின் துணை பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட 4 பேருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி தங்களது வாழ்த்துகளை வெளிப்படுத்தினர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கூட்டம் தொடங்கியவுடன் கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் மற்றும் கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி என்பது முக்கியமான பதவி ஆகும். பேரறிஞர் அண்ணா 1949-ம் ஆண்டு தி.மு.க.வை தொடங்கிய போது அவர் பொதுச்செயலாளராக இருந்தார். பெரியாருக்காக தி.மு.க. தலைவர் பதவி எப்போதும் காலியாக இருக்கும் என்று அண்ணா அறிவித்தார். அண்ணா மறைகிற வரை தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியே இருந்தது. 1969-ம் ஆண்டு அவர் மறைவை தொடர்ந்து, நெடுஞ்செழியன் தற்காலிக பொதுச்செயலாளர் ஆனார். அப்போது முதல்-அமைச்சர் பொறுப்பை கருணாநிதி ஏற்றார்.
இந்த காலகட்டத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை கொண்டு வந்தனர். பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் கருணாநிதி போட்டியிடுவதாக அறிவித்தார். நெடுஞ்செழியனும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தார். அப்போது இந்த பிரச்சினையில் சமரச தீர்வு எட்டப்பட்டது. அதன்படி, நெடுஞ்செழியன் பொதுச்செயலாளர் என்றும், தலைவர் பதவியை உருவாக்கி கருணாநிதியை அந்த பொறுப்பில் அமர்த்துவது என்றும் முடிவானது. தலைவர் பதவிக்கு சிறப்பு அதிகாரங்களும் அப்போது வழங்கப்பட்டன.
1977-ம் ஆண்டு நெடுஞ்செழியன் தனி கட்சி தொடங்கினார். இதன் பின்பு 1977-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு இறக்கும் வரையில் க.அன்பழகன் பொதுச்செயலாளராக இருந்தார். தற்போது தி.மு.க.வின் 4-வது பொதுச்செயலாளராக துரைமுருகன் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
பொதுச்செயலாளர் பதவியை போன்று பொருளாளர் பதவியும் தி.மு.க.வில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தபோது பொருளாளர் பதவி வகித்தார். மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக வருவதற்கு முன்னர் பொருளாளர் பதவியில் இருந்தார். தற்போது டி.ஆர்.பாலு தி.மு.க.வின் 8-வது பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் மறைவை தொடர்ந்து, அந்த பதவிக்கான அனைத்து அதிகாரங்களும் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பொதுச்செயலாளருக்கான அனைத்து அதிகாரங்களும் மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது.
தி.மு.க.வின் புதிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
கவிஞர் வைரமுத்துவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story