அக்டோபரில் கொரோனா 2-வது அலைக்கு வாய்ப்பு: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி


அக்டோபரில் கொரோனா 2-வது அலைக்கு வாய்ப்பு: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
x
தினத்தந்தி 10 Sept 2020 3:15 AM IST (Updated: 10 Sept 2020 3:00 AM IST)
t-max-icont-min-icon

நாம் பாதுகாப்பாக இல்லாமல் மெத்தனமாக இருந்தால் அக்டோபரில் கொரோனா 2-வது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

பூந்தமல்லி, 

திருவேற்காடு நகராட்சியில் ரூ.97 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் நகராட்சிக்கு குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்கள் மற்றும் 2 பூங்காக்களையும் அவர் திறந்துவைத்தார்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் வளர்ச்சியை பொறுத்தவரை தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து அ.தி.மு.க. அரசு ஏராளமான விஷயங்களை செய்து வருகிறோம். மத்திய அரசிடம் இருந்து இன்னும் அதிகமான உதவியை எதிர்பார்க்கிறோம். வரும் தேர்தலில் சாதனைகளின் அடிப்படையில் வாக்குகள் கேட்கப்போகிறோம்.

நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் கொரோனாவின் 2-வது அலை வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நாம் மெத்தனமாக இருந்துவிட்டால் அக்டோபரில் கொரோனாவின் 2-வது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது. கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் சுவரொட்டியாக ஒட்டி உள்ளனர். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் அவர் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் இவ்வாறு ஒட்டி உள்ளனர். அது வரவேற்க தகுந்த விஷயம் என கருதுகிறேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்டு போகாத வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் திருவேற்காடு நகராட்சி கமிஷனர் செந்தில்குமரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.


Next Story