குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரனுக்கு கொரோனா; குடும்பத்தினரும் பாதிப்பு


குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரனுக்கு கொரோனா; குடும்பத்தினரும் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2020 12:52 AM IST (Updated: 11 Sept 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற உறுப்பினராக ஆர்.டி.ராமச்சந்திரன் (வயது 46) உள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் சளி மற்றும் காய்ச்சல் இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என 4 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

மேலும் ஆர்.டி.ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதன் தொடர்ச்சியாக அங்கு வழக்கமாக உடல்நிலை பரிசோதனைக்கு மாதாமாதம் 20ந்தேதி சென்று வருவார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தான் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறி முறையாக ‘இ-பாஸ்‘ பெற்று தனது காரில் கொச்சிக்கு சென்றார்.

அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோதும் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து மருத்துவமனை டாக்டர்கள் 14 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருக்குமாறு அவரிடம் தெரிவித்தனர். அதன்படி அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் தனது ‘வாட்ஸ்-அப்‘ செயலி மூலம் ‘நான் சிறுநீரக மாதாந்திர பரிசோதனைக்காக கடந்த 7ந்தேதி கேரள மாநிலம் கொச்சி வந்தேன். அங்கு மருத்துவமனை பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது மேலும் உறுதியானது. அதனை தொடர்ந்து 14 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அதனால் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது நலமாக உள்ளேன்’ என தெரிவித்துள்ளார். மேலும் கட்சி தொண்டர்கள் தன்னை அழைப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதற்கிடையே, அவரது தாயார் சிகிச்சை பெற்று குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். மேலும் மனைவி மற்றும் குழந்தைகள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story