தேதி மாற்றம்: ஜனவரி 20-ந்தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு; தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு


தேதி மாற்றம்:  ஜனவரி 20-ந்தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு; தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2020 3:45 AM IST (Updated: 11 Sept 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஜனவரி 15-ந்தேதிக்குப் பதிலாக, 20-ந்தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

சென்னை,

வரும் ஜனவரி 1-ந்தேதியை வாக்காளராக தகுதியடையும் நாளாக (18 வயது முடிப்பவர்கள்) கணக்கிட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணியை மேற்கொள்ள, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் 16-ந் தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் வாக்காளர்கள், தங்கள் பெயர் விபரங்களை சரிபார்க்க வேண்டும்.

பெயர் சேர்ப்பது, ஆட்சேபனை தெரிவிப்பது போன்றவற்றுக்கு நவம்பர் 16-ந் தேதியில் இருந்து டிசம்பர் 15-ந் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5-ந் தேதி இறுதி செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15-ந் தேதி வெளியிடப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இறங்கியுள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) சத்யபிரத சாகு 3-ந் தேதியன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தநிலையில் நேற்று சத்யபிரத சாகு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், 2021-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் இறுதிப் பட்டியல் தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட வேண்டும் (15-ந் தேதிக்கு பதிலாக) என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story