கொரோனா ஊரடங்கு: 6 மாதங்களுக்கு பின் பல்லாவரம் வாரசந்தை மீண்டும் திறப்பு; வியாபாரிகள் மகிழ்ச்சி
கொரோனா ஊரடங்கால் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு பல்லாவரம் வார சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் வார சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் அனைத்து பொருட்களும் கிடைப்பதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வாரந்தோறும் இங்கு குவிந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவது வழக்கம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை போட்டு தங்கள் பொருட்களை விற்று வந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து வியாபாரம் செய்வது உண்டு. கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த சந்தை செயல்படவில்லை. இதனால் இந்த சந்தையை மட்டுமே நம்பியிருந்த வியாபாரிகள், சென்னையில் வாடகை கொடுக்கக்கூட வழியில்லாமல் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். எஞ்சிய சில வியாபாரிகளும் மீன், காய்கறி மற்றும் கோலமாவு என கிடைத்த வியாபாரத்தை செய்து வந்தனர். இதில் பல வியாபாரிகள் கடன் வாங்கி கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து சென்னையில் அல்லல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் செய்யப்பட்டதால் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமையான நேற்று மீண்டும் பல்லாவரத்தில் வாரசந்தை செயல்பட பரங்கிமலை-பல்லாவரம் கன்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் அனுமதி அளித்தது.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் தடவையாக வார சந்தை திறக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை அதிகாலையிலேயே கொண்டு வந்து பல்லாவரம் சந்தையில் வியாபாரத்தை தொடங்கினர். ஆனால் சந்தையில் வழக்கமான கூட்டத்தைவிட குறைவாகவே மக்கள் வந்தனர்.
இதுதொடர்பாக சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-
கொரோனாவால் எங்கள் வாழ்வாதாரம் இழந்து சந்தையில் விற்க வைத்திருக்கும் பொருட்களை குடோனில் வைத்துக்கொள்ளக்கூட வாடகை கொடுக்க வழியில்லாமல் கடும் துயரத்தில் இருந்தோம். கிடைக்கும் வேலைகளை செய்து உயிர் பிழைத்தோம். தற்போது மீண்டும் வாரசந்தையை திறந்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை நம்பியே நாங்கள் கடையை திறந்து உள்ளோம். முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது. அடுத்த வாரம் முதல் அதிக மக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். மக்களால் நாங்கள் மீண்டும் வசந்தம் பெறுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story