விளையாட்டு விபரீதமானது: தூக்கில் தொங்கியபோது போல் ‘செல்பி’ எடுக்க முயன்ற வாலிபர் பலி


விளையாட்டு விபரீதமானது: தூக்கில் தொங்கியபோது போல் ‘செல்பி’ எடுக்க முயன்ற வாலிபர் பலி
x
தினத்தந்தி 12 Sep 2020 10:49 PM GMT (Updated: 12 Sep 2020 10:49 PM GMT)

தூக்கில் தொங்கியபோது போல் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

காரைக்குடி, 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் சரகம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திரவியம்(வயது 24). இவர் தேவகோட்டையில் உள்ள உறவினருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு போடும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று புதுவயலில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இரவு பஸ் நிலையம் அருகே நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த அறையில் தங்கினார்.

அப்போது விளையாட்டிற்காக தூக்கில் தொங்குவது போல் செல்பி எடுக்க முடிவு செய்தார். இதற்காக மின்விசிறியில் வேட்டியை மாட்டி நாற்காலியில் ஏறி நின்று தூக்கு மாட்டுவது போல் செல்பி எடுத்துள்ளார். அதை உறவினர்களின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நாற்காலி சரிந்ததால் அவர் தூக்கில் தொங்கினார். இதில் கழுத்து இறுகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

நாகர்கோவில் கோட்டார் குலாளர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவருடைய மகள் அட்சயா (வயது 13). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்தார்.

மாணவி அட்சயா நேற்று வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடியதாக கூறப்படுகிறது. ஊஞ்சல் வேகமாக சுற்றியபோது, ஊஞ்சல் கயிறு அட்சயாவின் கழுத்தில் சுற்றி இறுக்கியது. இதில் கழுத்து இறுகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அட்சயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரேத பரிசோதனை செய்தபிறகு அட்சயாவின் உடலை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story