மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதிஸ்ரீதுர்கா நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் தர்மபுரி மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறும் சூழ்நிலையில், 3 மாணவர்களும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதேநேரத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில்,
நீட் தேர்வு மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பணிவான வேண்டுகோள். நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை செய்தியை கேட்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள்பெற்றோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது நியாயம்தான். ஆனால், அதே பிள்ளைகளுக்கு மன உறுதியையும், தோல்வியை தாங்கக்கூடிய சக்தியையும் சொல்லிக்கொடுங்கள். நீட் தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியம், தன்னம்பிக்கையை கொடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story