அமைச்சர் பங்கேற்ற அ.தி.மு.க. பாசறை கூட்டத்தில் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை-தொண்டர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு


அமைச்சர் பங்கேற்ற அ.தி.மு.க. பாசறை கூட்டத்தில் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை-தொண்டர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Sept 2020 5:00 AM IST (Updated: 14 Sept 2020 2:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் பங்கேற்ற அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் நாற்காலியை தூக்கி வீசி ரகளை செய்தவர்களால் தொண்டர்கள் சிதறி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் பங்கேற்ற அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் நாற்காலியை தூக்கி வீசி ரகளை செய்தவர்களால் தொண்டர்கள் சிதறி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி பிரமுகர்கள் பேசிக்கொண்டிருந்தனர். மேடையில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், அண்ணாவி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட நிர்வாகிகள் இருந்தனர். அப்போது திடீரென 50 பேர் கையில் மஞ்சள் நிற கொடி பிடித்தபடி மேடையை நோக்கி வந்தனர்.

நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை

அவர்கள் மேடையின் முன்பகுதியில் கோஷம் போட்டுக் கொண்டே நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை செய்தனர். இதனால் முன்பகுதியில் இருந்த தொண்டர்கள் உள்பட அனைவரும் எழுந்து சிதறி ஓடினார்கள். சம்பவம் நடந்தபோது மண்டபத்திற்குள் போலீசார் இல்லை.

அமைச்சர் வளர்மதியின் பாதுகாப்பு அதிகாரி அவர் மீது நாற்காலி வந்து விழாமல் பார்த்துக் கொண்டார். ரகளை செய்தவர்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது அவர்கள் அங்கிருந்து வெளியே ஓடினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். உடனடியாக நாற்காலிகள் சரி செய்யப்பட்டு மீண்டும் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட அ.தி.மு.க. மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன், அவரது உறவினர் திலீப் என்பவர் உள்பட 50 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் கண்ணதாசனுக்கு ஒன்றிய செயலாளர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story