காவல்துறை, தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 129 பேருக்கு அண்ணா பதக்கம்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


காவல்துறை, தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 129 பேருக்கு அண்ணா பதக்கம்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2020 10:30 PM GMT (Updated: 14 Sep 2020 9:02 PM GMT)

காவல்துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 129 பேர் அண்ணா பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகை பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று முதல்-அமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல், முதல்நிலை காவலர் வரையிலான 100 பேர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் துணை இயக்குனர் முதல் தீயணைப்பு வீரர் வரையிலான 10 பேர், சிறைத்துறையில் உதவி சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 பேர், ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் ஊர்க்காவல் படை வீரர் வரையிலான 5 பேர், விரல்ரேகை பிரிவில் 2 துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அதிகாரிகள் முறையே உதவி இயக்குநர், அறிவியல் அலுவலர் என மொத்தம் 129 பேரின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் அண்ணா பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ரூ.5 லட்சம் வெகுமதி

பதக்கம் பெறுகின்றவர்களுக்கு அவரவர் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி வெண்கல பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த மானியத்தொகையும் அளிக்கப்படும்.

கடந்த 15.8.2020 அன்று நெல்லை சேவியர் காலனியில், 70 அடி உயர நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற எஸ்.கணேசன்(வயது 45) என்பவரை காப்பாற்றியதற்காக, பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி எஸ்.வீரராஜ், முன்னணி தீயணைப்பு வீரர் எஸ்.செல்வம் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் வீரதீர செயலுக்கான பதக்கம் வழங்கப்படுகிறது.

இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும். பதக்கம் பெற தேர்வானவர்களுக்கு பின்னர் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்களை வழங்குவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story