நீட் விவகாரத்தில் மாணவர்கள் மரணத்திற்கு தமிழக அரசே முழுக்காரணம் - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
நீட் விவகாரத்தில் மாணவர்கள் மரணத்திற்கு தமிழக அரசே முழுக்காரணம் என்று முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பர் 17 - பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள், செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாள், இந்த 3 விழாக்களையும் இணைத்து கருணாநிதி முப்பெரும் விழாவாக்கினார்.
அந்த வழியில் இந்த ஆண்டும் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஊரடங்கு கால விதிமுறைகளை மீறாமல், பாதுகாப்பு, தனிமனித இடைவெளியுடன் செப்.15-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறும்” என அவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து திமுகவின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
முப்பெரும் விழாவில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் விவகாரத்தில் மாணவர்கள் மரணத்திற்கு தமிழக அரசே முழுக்காரணம் என்று தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுதான் காரணம். நீட் மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு நீக்கப்படும். மொத்தமாக தமிழகத்தில் 8 மாதத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கொரோனாவால் ஒரு உயிர் கூட போகாது என்ற சொன்னவர் முதல்வர்.. ஆனால் 8,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா 3 நாட்களில் சரியாகிவிடும், 10 நாட்களில் சரியாகிவிடும் என சொன்னவர்கள் கடவுள் பார்த்துக்குவார் என்றனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.” என்று கூறினார்
Related Tags :
Next Story