‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார்?எடப்பாடி பழனிசாமி ஆவேசம்; காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றம்


‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார்?எடப்பாடி பழனிசாமி ஆவேசம்;  காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 16 Sep 2020 12:00 AM GMT (Updated: 15 Sep 2020 7:22 PM GMT)

‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார்? என்று சட்டசபையில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அதனைத் தொடர்ந்து, நேரமில்லா நேரம் (ஜீரோ ஹவர்) எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து ‘நீட்’ தேர்வு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரியலூர் அனிதா முதல், இன்று திருச்செங்கோடு மோதிலால் வரை, பல மாணவ மாணவிகள் ‘நீட்’ தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தி.மு.க. உள்ளிட்ட அனைவருமே தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம்.

இதே பேரவையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக மாணவச் செல்வங்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கக்கோரி இந்த அவையில் இரு மசோதாக்களை நிறைவேற்றி ஜனாதிபதியின் அனுமதிக்கு அனுப்பிவைத்தோம்.

ஆனால் இந்த அவையின் உணர்வுகளை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அனுப்பிய மசோதாக்களுக்கும் இதுவரை ஒப்புதல் வாங்கிடவில்லை. செப்டம்பர் 12-ந் தேதி அதாவது ‘நீட்’ தேர்வுக்கு முதல் நாள் மட்டும் ஒரே நாளில் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் என 3 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

“என்னை மன்னித்து விடுங்கள். நான் சோர்வடைந்துவிட்டேன்” என்று மதுரையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் ஆடியோ வாய்ஸ் ஒட்டுமொத்த தமிழக ‘மாணவர்களின் வாய்ஸ்’ என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

இதற்கிடையில் செப்டம்பர் 13-ந் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் எண்ணிப்பார்க்க முடியாத அடக்குமுறைகள், கெடுபிடிகள் நடந்திருக்கிறது. புதுமணத் தம்பதியின் தாலியைக் கழற்றி வைத்துவிட்டுத் தேர்வு எழுதுங்கள் என்ற கொடுமை நெல்லையில் நடைபெற்றுள்ளது. பசிக் கொடுமையால் மாணவிகள் மயங்கி விழுந்துள்ளார்கள். அடிப்படை வசதிகள் இன்றி பெற்றோரும், தேர்வு எழுதப்போன மாணவர்களும் தவித்துள்ளார்கள்.

இந்தி வழிகாட்டுதல்கள் மதுரை தேர்வு மையங்களில் தலைதூக்கி தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு பதில் ஆங்கிலக் கேள்வித்தாள் கொடுத்து சில மையங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இப்படியொரு கொடுமையான ‘நீட்’ தேர்வு தேவையா?. ஆகவே, தமிழக சட்டமன்றத்தையும், தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத ‘நீட்’ தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், ‘நீட்’ தேர்வை ரத்துசெய்ய அ.தி.மு.க. அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய மந்திரி பியூஷ் கோயலை கண்டித்தும் கண்டன தீர்மானம் நாம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ கல்வியில் சேர்க்கை நடைபெறுவதை அரசு உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

அ.தி.மு.க. உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்):- ‘நீட்’ தேர்வு அறிவிப்பை மத்திய காங்கிரஸ் அரசு 21-10-2010-ல் வெளியிட்டது. அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. இதை தி.மு.க. மறுக்குமா?

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- ‘நீட்’ தேர்வை தி.மு.க. என்றைக்கும் ஏற்றுக்கொள்ளவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- 2010-ம் ஆண்டுதான் ‘நீட்’ தேர்வை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது காங்கிரஸ் அரசில் தி.மு.க. இடம்பெற்றிருந்தது.

இன்பதுரை:- சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வந்த பிறகு மறுசீராய்வு மனுவை காங்கிரஸ் அரசுதான் தாக்கல் செய்தது. இதனால்தான் ‘நீட்’ தேர்வு வருவதற்கு காரணமாகிவிட்டது. அப்போது தி.மு.க. அமைதியாக இருந்துவிட்டு, இப்போது குறைசொல்கிறீர்கள். எனவே, வரலாற்றை திரிக்காதீர்கள். ‘நீட்’ விவகாரத்தில் தி.மு.க. குழம்பிப்போய் உள்ளது. இப்போது, மாணவர்கள் மத்தியில் எடப்பாடி அலை வீசுகிறது. ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு சென்று வாதாடியது, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். இதை யாராலும் மறுக்க முடியுமா?.

(இந்த நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இன்பதுரை பேசிய குறிப்பிட்ட பகுதியை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதை ஏற்க மறுத்த சபாநாயகர் ப.தனபால், “உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். அப்போது நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்” என்று தெரிவித்தார். ஆனாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து நின்று கொண்டே இருந்தனர்)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ‘நீட்’ தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நளினி சிதம்பரம் ஆஜரானாரா?, இல்லையா?. இது உண்மை என்றால் அவை குறிப்பில் இருக்கட்டும். இல்லை என்றால் நீக்குங்கள்.

(அதன் பிறகும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்ல மறுத்து அங்கேயே நின்று கொண்டிருந்தனர். சபாநாயகர் ப.தனபால் எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவைக் காவலர்கள் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்)

தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பேசினார்.


மு.க.ஸ்டாலின்:- ‘நீட்’ தேர்வை தமிழகத்தில் நுழையவிடாமல் செய்தது தி.மு.க. தான். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது தி.மு.க. தான். 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தான் ‘நீட்’ தேர்வு வந்தது. ‘நீட்’ தேர்வை பா.ஜ.க. திணித்தபோது அதை வேடிக்கை பார்த்தது அ.தி.மு.க. தான்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர்:- ‘நீட்’ தேர்வு மாநில சுயாட்சிக்கு வேட்டுவைத்துவிட்டது. 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே, ‘நீட்’ தேர்வை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:- ‘நீட்’ என்ற வார்த்தை இந்தியாவில் எப்போது ஒலிக்கத் தொடங்கியது?, அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள்?.

இந்த நேரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- யாருடைய ஆட்சியில் ‘நீட்’ தேர்வு வந்தது?. ‘நீட்’ தேர்வு எப்போது வந்தது?. ‘நீட்’ தேர்வை யார் அறிமுகப்படுத்தினார்கள்? என்று இந்த நாட்டிற்கே தெரியும். யாருக்கும் தெரியாதது கிடையாது. 

2010-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி தீர்ப்பைப் பெற்றது அ.தி.மு.க., மறுக்க முடியுமா?, அப்பொழுது அந்த தீர்ப்பை எதிர்த்து யார் வாதாடினார்கள்?, இவ்வளவு பேருக்கு பிரச்சினை வந்ததற்கு யார் காரணம்?, நாங்கள் அல்ல. 2010-ம் ஆண்டில் ‘நீட்’ தேர்வை கொண்டுவந்ததுதான் 13 பேர் மரணத்திற்கு காரணம். தி.மு.க. துணை போனது, யாரும் மறுக்க முடியாது. வரலாற்று பிழையை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:- வரலாற்றை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ‘நீட்’ தேர்வு குறித்து பேச காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை. 27-12-2010 வரலாற்றில் ஒரு கருப்பு நாள். இந்திய மருத்துவ குழுமம் ‘நீட்’ குறித்த நோட்டீஸ் வெளியிட்டது.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- அன்றைய தினம் தி.மு.க.வை சேர்ந்த காந்தி செல்வன்தான் சுகாதாரத்துறை இணை மந்திரியாக இருந்தார்.

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:- ‘நீட்’ என்ற பாம்பை வெளியே விட்டு பால் வார்த்தது யார்?, ‘நீட்’ விதையை விதைத்தது யார்?. காங்கிரஸ் அரசும், அந்த கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க.வும் தான். இதில், அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. ‘நீட்’ எதிர்ப்பு கொள்கையில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது. ஆனால், மாணவர்களை குழப்பக் கூடாது. 8 மாதத்தில் ‘நீட்’ தேர்வு கிடையாது என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். அது எப்படி?. அதற்கான வழிவகையை சொல்லுங்கள்.

மு.க.ஸ்டாலின்:- ‘நீட்’ விவகாரத்தில் கட்சி பாகுபாடின்றி போராட அனைவரும் தயார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை வந்தபோது, முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பேசினார். சட்ட முன்வடிவை உருவாக்கி, அதை தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றினார். அதுபோலத்தான், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம்.

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:- ஜல்லிக்கட்டு தமிழகத்திற்கு மட்டுமான நிகழ்வு. அது ஒரு மாநிலத்தை சார்ந்த பிரச்சினை. ‘நீட்’ அப்படி அல்ல. தேசிய அளவிலான பிரச்சினை. எத்தனையோ மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழகம் மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story