இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் 1½ மணி நேரம் நடக்கும்- சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் 1½ மணி நேரம் நடைபெறும் என்றும், மாணவர்கள் 18 பக்கங்களுக்கு மிகாமல் பதில் எழுதி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.
சென்னை,
இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் 1½ மணி நேரம் நடைபெறும் என்றும், மாணவர்கள் 18 பக்கங்களுக்கு மிகாமல் பதில் எழுதி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இருந்தாலும், கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, அதற்கான ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணிநேரம் நடக்கும் என்று தெரிவித்த நிலையில், தற்போது சென்னை பல்கலைக்கழகம் 1½ மணி நேரம் நடக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வெளியிட்ட அறிவுரைகள் வருமாறு:-
* இளங்கலை, முதுகலை மற்றும் நிபுணத்துவ பட்டப்படிப்பு மாணவர்களின் நடப்பு இறுதி பருவம், ஏற்கனவே இறுதி செமஸ்டரில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும்.
* இந்த தேர்வை கல்லூரி ஒரு கண்காணிப்பு (நோடல்) அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் இந்த தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு விவரங்களை குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் மூலமாக தெரிவிப்பார்.
* தேர்வுக்கான காலம் 1½ மணி நேரம் (90 நிமிடம்) ஆகும். முந்தைய செமஸ்டர் தேர்வை போலவே வினாத்தாள் முறை இருக்கும். தேர்வு காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கும். வினாத்தாள் தேர்வு நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதனை பதிவிறக்கம் செய்ததும், கல்லூரி கண்காணிப்பு அதிகாரியிடம் பதிவிறக்கம் செய்துவிட்டேன் என மாணவர்கள் தெரிவிக்க வேண்டும்.
* தேர்வை மாணவர்கள் ‘ஏ4 அளவு பேப்பரில்’ 18 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி முடிக்கவேண்டும். மாணவர்கள் ஒவ்வொரு பேப்பரிலும் பதிவு எண், பாடப்பிரிவு கோடு, பக்க எண் மற்றும் கையெழுத்து இடம்பெற வேண்டும்.
* இந்த தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு 16-ந்தேதி (இன்று) முதல் 18-ந்தேதி வரை மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் அதில் பங்குபெற வேண்டும். மாணவர்களுக்கு வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கும், விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதற்கும் இணையதளவசதி இல்லை என்றால், அதுகுறித்து கல்லூரி முதல்வர், தலைமை கண்காணிப்பாளர், கண்காணிப்பு அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும்.
* தேர்வை மாணவர்கள் நீலம் மற்றும் கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுதவேண்டும். தேர்வு எழுதிமுடித்ததும் 3 மணி நேரத்துக்குள் அந்த பேப்பர்களை வரிசைப்படி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டும். பதிவேற்றம் செய்யமுடியாத மாணவர்கள், விரைவுதபால் மூலம் கல்லூரி முதல்வருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும். அனுப்பியதும் கண்காணிப்பு அதிகாரியிடம் பதிவேற்றம் செய்யப்பட்டது என தெரிவிக்க வேண்டும்.
* தேர்வுமுடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தப்பட வேண்டும். கல்லூரி முதல்வர்கள் மூத்த மற்றும் தகுதிவாய்ந்த பேராசிரியர்களை கொண்டு விடைத்தாள்களை திருத்த அறிவுறுத்த வேண்டும். மதிப்பெண்களை தேர்வு பதிவு முறை (இ.ஆர்.எஸ்.) மூலம் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story