வரத்து குறைவால் வெங்காயம், தக்காளி விலை கடும் உயர்வு
வரத்து குறைவு காரணமாக வெங்காயம், தக்காளி விலை கடும் உயர்வு அடைந்து இருக்கிறது.
சென்னை,
காய்கறி விலை கடந்த வாரத்தை விட தற்போது விலை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக பல்லாரி வெங்காயம், தக்காளி, சாம்பார் வெங்காயம், கத்தரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், கேரட் உள்பட சில காய்கறி வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
கர்நாடகா, ஆந்திராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது, கொரோனா தொற்று காரணமாக காய்கறி வகைகளை குறைவாக பயிரிட்டது போன்ற காரணங்களினால் வரத்து வெகுவாக குறைந்து இருப்பதால் அதன் விலை கடந்த வாரத்தை காட்டிலும் உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும், கோயம்பேட்டில் இருந்து திருமழிசை பகுதிக்கு காய்கறி மார்க்கெட் மாற்றியதில் இருந்து காய்கறி வகைகளை மொத்த வியாபாரிகள் இருப்பு வைப்பதில் அதிக பிரச்சினை இருப்பதும் காய்கறி விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் வரை பல்லாரி வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்தது. தற்போதும் பல்லாரி வெங்காயம் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. ஒரு கிலோ பல்லாரி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் ஏற்பட்ட விலை உயர்வைப்போல இருக்காது என்றும், ஒரு கிலோ ரூ.70 வரை பல்லாரி வெங்காயம் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், இன்னும் ஓரிரு மாதங்கள் காய்கறி விலை இதேநிலை தான் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
விலை நிலவரம்
நேற்று திருமழிசை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு:-
(அடைப்புக்குறிக்குள் கடந்த வார விலை)
பல்லாரி வெங்காயம்- ரூ.30 முதல் ரூ.40 வரை(ரூ.20 முதல் ரூ.25 வரை), தக்காளி- ரூ.40 முதல் ரூ.50 வரை(ரூ.30 முதல் ரூ.40 வரை), சாம்பார் வெங்காயம்- ரூ.60(ரூ.40), கத்தரிக்காய்- ரூ.30 முதல் ரூ.40 வரை(ரூ.20 முதல் ரூ.30 வரை), பீன்ஸ்- ரூ.70 முதல் ரூ.80 வரை(ரூ.50 முதல் ரூ.60 வரை), அவரைக்காய்- ரூ.50 முதல் ரூ.70 வரை(ரூ.30 முதல் ரூ.40 வரை), கேரட்- ரூ.60 முதல் ரூ.70 வரை(ரூ.40 முதல் ரூ.50 வரை), பீட்ரூட்- ரூ.15 முதல் ரூ.20 வரை, முருங்கைக்காய்- ரூ.50 முதல் ரூ.60 வரை(ரூ.40 முதல் ரூ.50 வரை), வெண்டைக்காய்- ரூ.40 முதல் ரூ.50 வரை(ரூ.30 முதல் ரூ.40 வரை), நூக்கல்- ரூ.20, முட்டைக்கோஸ்- ரூ.15 முதல் ரூ.20 வரை, முள்ளங்கி- ரூ.20, உருளைக்கிழங்கு- ரூ.40(ரூ.30 முதல் ரூ.35 வரை), சேனைக்கிழங்கு- ரூ.15 முதல் ரூ.20 வரை, சேப்பக்கிழங்கு- ரூ.15 முதல் ரூ.20 வரை, மிலகாய்- ரூ.70(ரூ.40 முதல் ரூ.50 வரை), இஞ்சி- ரூ.70 முதல் ரூ.80 வரை, புடலங்காய்- ரூ.20 முதல் ரூ.30 வரை, கோவக்காய்- ரூ.20 முதல் ரூ.30 வரை, கொத்தவரங்காய்- ரூ.20 முதல் ரூ.30 வரை, தேங்காய்(காய் ஒன்று)- ரூ.25 முதல் ரூ.30 வரை.
Related Tags :
Next Story