தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்


தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’-  எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2020 12:30 AM GMT (Updated: 16 Sep 2020 9:40 PM GMT)

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே நீடிக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ் 2 அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

அதைத்தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் (‘ஜீரோ ஹவர்’) எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘தேசிய கல்வி கொள்கை-2020’ மாநிலங்களின் கல்வி உரிமைக்கு எதிரானது. “மும்மொழித் திட்டம்” என்று திணிக்க முயலுவது, அண்ணாவால் அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் இருமொழி கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கும் முக்கியத்துவம், தமிழ் மொழிக்கும் ஏனைய இந்திய மொழிகளுக்கும் இல்லை.

ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் இணைத்து வழங்கப்பட வேண்டிய மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி என்பது, குழந்தைகளின் உரிமைகளுக்கு, மனித உரிமைகளுக்கு புறம்பானது. 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; பிளஸ்-2 கல்விமுறையில் மாற்றம் எல்லாம், நம் மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படும் கல்விமுறையை சீர்குலைப்பது ஆகும். குலக்கல்வி திட்டத்தின் மறுவடிவமாக வரும் தொழிற்கல்வி, ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன.

உயர்கல்வியில்; தன்னாட்சி உரிமை பெற்ற செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது; உயர்கல்வி ஆணையம் அமைப்பது மாநில அதிகாரங்களை பறித்துக்கொள்ளும் போக்கு. கலை மற்றும் அறிவியல் பட்டய படிப்புகளில் சேரவும் நுழைவுத்தேர்வு; வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது; மாநிலங்களில் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடங்களை தேசிய அளவில் வகுப்பது ஆகியன ஆபத்தானவை.

5-ம் வகுப்பு வரை, முடிந்தால் தாய்மொழியில் கற்றுக்கொடுக்கலாம் என்பது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள, தமிழ் கற்றல் சட்டம் 2006-க்கு எதிரானது ஆகும். 3-8-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு, இருமொழி கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார்.

தேசிய கல்வி கொள்கை பற்றி ஆராய இரு குழுக்களை (உயர்கல்வி, பள்ளிக்கல்வி) நியமித்து உள்ளார். பாதக அம்சங்களை பெற அக்குழுக்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். தமிழும், ஆங்கிலமும் என்ற இருமொழி கொள்கை தமிழகத்தின் உயிர் மூச்சாக உயிர் நாடியாக விளங்கிக்கொண்டு இருக்கிறது.

ஆகவே இதுகுறித்து உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்-அமைச்சர் விவாதிக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அழுத்தம் திருத்தமாக கேட்டுக்கொண்டு, சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றித்தரவேண்டும். தேசிய கல்வி கொள்கையை விவாதித்து சமூகநீதி, கூட்டாட்சி தத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கும் தமிழ்மொழிக்கும் விரோதமான, தேசிய கல்வி கொள்கை 2020-ஐ முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டு அமைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


இதைத்தொடர்ந்து, இதே பொருள் குறித்து, அ.தி.மு.க. உறுப்பினர் ராஜன் செல்லப்பா, காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் பேசினார்கள்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில் கூறியதாவது:-

மத்திய அரசு 31-5-2019 அன்று வரைவு தேசிய கல்வி கொள்கை 2019-ஐ வெளியிட்டது. மும்மொழி கொள்கைக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து 26-6-2019 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். வரைவு தேசிய கல்வி கொள்கை மீது பொதுமக்கள் மற்றும் கல்வித்துறை நிபுணர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு வரைவு தேசிய கல்வி கொள்கை மீதான தமிழக அரசின் கருத்துகள் 26-8-2019 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் உள்ள முக்கிய கருத்துகள் சிலவற்றை கூற விரும்புகிறேன்.

மும்மொழி கொள்கையை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கிறது. இருமொழி கொள்கையே தொடர்ந்து தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10, பிளஸ்-2 கல்வி முறையை மாற்றி அமைப்பது சரியாக இருக்காது என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 5 பிளஸ், 3 பிளஸ், 3 பிளஸ், 4 என்று மாற்றி அமைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பாடத்திட்டத்தை மட்டும் மாற்றியமைப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.


கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஏற்ற தேர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய தேர்வு முறை மூலமாக மாணவர்கள் சேர்க்கை கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர் அரவணைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். 3 வயதுக்கு மேல் மட்டுமே கற்பித்தல் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 29-7-2020 அன்று தேசிய கல்வி கொள்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசு இடையிலான தகவல் பரிமாற்றம்படிதான் இருக்க வேண்டும் என்றும், 1963-ம் ஆண்டு அலுவல் மொழியாக தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 1965-ம் ஆண்டு இந்திய அலுவல் மொழியாக மாற்ற அன்றைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதை எதிர்த்து மாணவர்களும், மக்களும் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். 23-1-1962 அன்று தமிழக பள்ளிகளில் மும்மொழி திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு அனுமதி அளித்து வரலாற்று திறப்புமிக்க தீர்மானத்தை அண்ணா நிறைவேற்றினார். அதன்பிறகு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து இந்தி மொழி முழுமையாக நீக்கப்பட்டது.

அண்ணா வழியில் எம்.ஜி.ஆரும் முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் இந்தி பேசாத மாநிலத்தில் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்று சூளுரையிட்டார். இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்று உறுதியாக தெரிவித்தார். இதுமட்டுமல்ல, தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார்.

மத்திய அரசு வரைவு தேசிய கல்வி கொள்கையை வெளியிட்டபோதே, அதில் மும்மொழி கொள்கை இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி தமிழக அரசு தீவிரமாக எதிர்த்துள்ளது. இந்த பேரவையில் 16-7-2019 அன்று அஞ்சல் தேர்வுகள் குறித்த விவாதத்தின்போது, தமிழ்நாட்டில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், எங்கள் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று முதல்-அமைச்சர் கூறினார்.


இருமொழி கொள்கையை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்று சுதந்திர தின விழா உரையில் முதல்-அமைச்சர் கூறினார். மும்மொழி கொள்கையை தமிழக அரசு என்றைக்கும் அனுமதிக்காது. இருமொழி கொள்கை மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று முதல்-அமைச்சர் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

ஏனைய அம்சங்களை விரிவாக பரிசீலிக்க பள்ளி கல்வித்துறை சார்பிலும், உயர் கல்வித்துறை சார்பிலும் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்து வருகிறது. இந்த குழுக்கள் தனது அறிக்கையை சமர்ப்பித்தவுடன் புதிய கல்விக்கொள்கையின் ஏனைய அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். சமூகநீதி, கூட்டாட்சி தத்துவம், சமதர்மம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படுமேயானால் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கத்தை தீர்மானமாக நிறைவேற்றித்தர கோருகிறோம். அரசின் விளக்கத்தைவிட தீர்மானம்தான் ஒட்டுமொத்த சட்டமன்றத்தின் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால், எங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்றார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின்னர் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில், “அரசு ஏற்றுக்கொண்ட விஷயத்தை தீர்மானமாக நிறைவேற்றினால் என்ன?. ஒவ்வொரு பிரச்சினையிலும் அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது. என்ன காரணம்?” என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி பதில்

அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி விளக்கமாக, தெளிவாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் குறிப்பிட்டு இருந்தார். இதை ஆய்வு செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பாக கல்வியாளர்களை கொண்ட ஒரு வல்லுனர் குழுவும், அதேபோல உயர்கல்வித்துறை சார்பாக ஒரு வல்லுனர் குழுவும் அமைக்க உத்தரவிடப்பட்டு அந்த பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அதில் தெரிவிக்கின்ற கருத்துகளின் அடிப்படையிலும், எதிர்க்கட்சி தலைவர்கள் சொன்ன கருத்துகளையும் அரசு ஆராயும்.

காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்ற தலைவர் திசையை மாற்றுகிறார். நாங்கள் மறுக்கவில்லை, திட்டவட்டமாக இங்கே தெரிவித்து இருக்கின்றோம்.


எங்களுடைய கொள்கை இருமொழி கொள்கை. அது தொடர்ந்து நீடிக்கும். அதில் பின்வாங்குவது கிடையாது. உங்களுடைய ஆட்சி காலத்தில்தான் கொண்டு வந்தீர்கள். நீங்கள் பேசுகிறீர்கள், வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் திட்டம் எல்லாம் கொண்டு வந்தது. மும்மொழி கொள்கையை கொண்டு வந்தீர்கள். அண்ணா சொன்னார்கள், முன்னாள் பிரதமர் நேரு உறுதிமொழி கொடுத்தார். அதனால் நீங்கள் இதை ஆழமாக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் மீது எடுத்துக்கொண்ட அக்கறைக்கு நன்றி.

ஆகவே, அ.தி.மு.க.வும் சரி, அ.தி.மு.க. அரசும் சரி, தொடர்ந்து இருமொழி கொள்கையை நாங்கள் பின்பற்றுவோம். ஆய்வு செய்வதற்காகத்தான் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. குழு கொடுக்கின்ற அறிக்கையை நாம் பரிசீலிக்கலாம். எது, எது நமக்கு சாதக, பாதகங்கள் என்பதை அறிந்து அதற்கு தக்கவாறு அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story