பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துக்கான சட்ட மசோதா நிறைவேறியது


பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துக்கான சட்ட மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 16 Sep 2020 10:21 PM GMT (Updated: 16 Sep 2020 10:21 PM GMT)

தமிழக சட்டசபையில் நேற்று தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுழல்முறை விளைவுகளின் காரணமாக சமீபத்தில் உலகப்பொருளாதாரம் குறைந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக உலகச்சந்தையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி சந்தையில் பெட்ரோலிய கச்சா மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலையில் அசாதாரண மாற்றம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாநில நிதியை பாதுகாக்கவும், இந்த பொருட்கள் மீது நுகர்வோர் சார்ந்திருப்பதை குறைக்கவும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரிமுறையை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், “கச்சா எண்ணெயின் விலை குறைய குறைய பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிய ஒரே நாடு இந்தியா தான். அவற்றுக்கு தினம் தினம் ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11, டீசல் லிட்டருக்கு ரூ.13 என்ற அளவில் விலை உயரக்கூடும். எனவே இந்த மசோதாவை நிறைவேற்ற கூடாது” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, “கொரோனாவினால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டத்தை திருத்துவது அவசியமாகிறது. என்றாலும், இதுபற்றி முதல்-அமைச்சருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த சட்ட மசோதா நிறைவேறியது.


Next Story