98 ஆண்டுகால பாரம்பரியமிக்க லேடி வெலிங்டன் உள்பட உரிய ஆவணங்கள் இல்லாத 3 அரசு பி.எட். கல்லூரிகளுக்கு நோட்டீஸ் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் நடவடிக்கை


98 ஆண்டுகால பாரம்பரியமிக்க லேடி வெலிங்டன் உள்பட உரிய ஆவணங்கள் இல்லாத 3 அரசு பி.எட். கல்லூரிகளுக்கு நோட்டீஸ் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Sept 2020 4:00 AM IST (Updated: 18 Sept 2020 3:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாத 3 அரசு பி.எட். கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாத 3 அரசு பி.எட். கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதில் 98 ஆண்டுகால பாரம்பரியமிக்க லேடி வெலிங்டன் கல்வி நிறுவனமும் வருகிறது.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் தென் மண்டலக்குழுவின் 388-வது கூட்டம் காணொலி வாயிலாக கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு குழுவின் தலைவர் கே.கே.ஷைனி தலைமை தாங்கினார். இதில் உறுப்பினர்கள், தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள், அந்தமான் நிகோபர் தீவு, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமாக உரிய கட்டமைப்பு வசதிகள், ஆவணங்கள் இல்லாமல் செயல்படும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளை (பி.எட். கல்லூரி) அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் நாமக்கல் குமாரபாளையம், புதுக்கோட்டை மற்றும் சென்னை லேடி வெலிங்டன் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அதில் போதுமான அளவில் பேராசிரியர்கள் இல்லை, உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை, ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை போன்ற காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட கல்லூரிகள் 90 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. அதுவரை இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தவும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் லேடி வெலிங்டன் கல்வி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 7 அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. 98 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்பாத காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட 58 கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story