அதிக கட்டணம் வசூலித்த 14 பள்ளிக்கூடங்களுக்கு நோட்டீஸ் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


அதிக கட்டணம் வசூலித்த 14 பள்ளிக்கூடங்களுக்கு நோட்டீஸ் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 18 Sept 2020 4:47 AM IST (Updated: 18 Sept 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

அதிக கட்டணம் வசூலித்த 14 பள்ளிக்கூடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பெரியார் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் பெரியார் -அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது பெரியாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் பெரியார் கல்லூரிக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மேலும் பெரியாரின் நினைவை போற்றுகின்ற வகையில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் வகுப்பு

திராவிட இயக்கத்தின் வரலாற்றில் அனைவரும் சமநிலையை அடைய வேண்டும் என்பதற்காக அரும்பணி ஆற்றியவர் தந்தை பெரியார். ஒரு நாடு எப்படி சீர்திருத்தத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டாக விளங்கியவர். தந்தை பெரியாரின் வழியில் திராவிட இயக்கம் 1967-ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் வேரூன்றி இன்றும் திராவிட இயக்கம் நிலைத்து நிற்கிறது.

பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாத நிலையில், மாணவ -மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், வருகிற 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

14 பள்ளிக்கூடங்கள்

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை மட்டுமே இருக்கும். பள்ளிக்கூடங்களில் முழுமையாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து 14 பள்ளிக்கூடங்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அறிக்கை வந்த பின் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம் அரசுக்கு இல்லை. பொருளாதார நெருக்கடியில் அதுபோன்ற நிலைகளில் அரசால் அறிவிக்க இயலாது.

வருகிற 21-ந்தேதிக்கு மேல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக்கூடங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்களின் மனநிலை, கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story