உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்யபாமா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்யபாமா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 19 Sept 2020 3:30 AM IST (Updated: 19 Sept 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று சத்யபாமா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா காணொலி வாயிலாக நேற்று நடந்தது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மேரி ஜான்சன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் கல்பாக்கம் இந்திராகாந்தி அணுஆராய்ச்சி நிலைய இயக்குனர் அருண்குமார் பாதுரி கலந்து கொண்டு 3 ஆயிரத்து 190 இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களையும், 129 முனைவர் பட்டங்களையும், 20 தங்கப்பதக்கங்களையும் வழங்கினார்.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்களின் உயர்கல்வி தேவையை உணர்ந்து, சுயநிதி கல்லூரிகளை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு எம்.ஜி.ஆர். அனுமதியளித்து, உயர்கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அந்த புரட்சியில் உதித்த ஒன்றுதான் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்.

‘சமுதாயத்தை உயர்த்தவேண்டும் என்ற விழிப்புணர்வு உடையவர் எவரோ, அவரே சிறந்த மனிதர்’ என்றார் டாக்டர் அம்பேத்கர். கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளை தத்தெடுப்பது, அந்த பள்ளிகளுக்கு நவீன உபகரணங்களை வழங்குதல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது போன்ற பணிகள், சமுதாய முன்னேற்றம் அடையவேண்டும் என்ற இந்த நிறுவனத்தின் உயர்ந்த எண்ணத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

‘அறிவுசார் மனிதவளம் மேம்பாடு அடைய வேண்டுமெனில், அனைவருக்கும் தங்குதடையின்றி கல்விகிடைப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்’ என்றார் ஜெயலலிதா. அவரைத்தொடர்ந்து, அவரின் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

அதில் குறிப்பிடத்தக்கவையாக, அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதிசெய்வதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2011-12-ம் ஆண்டு முதல் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,577 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2020-21-ம் ஆண்டு உயர் கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.5 ஆயிரத்து 52 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

ஜெயலலிதாவின் அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இன்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் சதவீதம் 49 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எழுந்து நடந்தால், இமயமலையும் நமக்கு வழிகொடுக்கும். உறங்கிக்கிடந்தால், சிலந்தி வலையும் நம்மை சிறைப்பிடிக்கும் என்பதை பட்டம் பெற்று, புதிய உலகத்தில் அடியெடுத்து வைக்கும் நீங்கள் உணர்ந்து செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணைவேந்தர் சசிபிரபா, இணை துணைவேந்தர் ஏ.லோகசண்முகம், பதிவாளர் ராவ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story