கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ‘திருக்கோவில்’ என்ற பெயரில் டி.வி. சேனல் தொடங்க முடிவு ஐகோர்ட்டில், அறநிலையத்துறை தகவல்


கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ‘திருக்கோவில்’ என்ற பெயரில் டி.வி. சேனல் தொடங்க முடிவு ஐகோர்ட்டில், அறநிலையத்துறை தகவல்
x
தினத்தந்தி 20 Sept 2020 1:29 AM IST (Updated: 20 Sept 2020 1:29 AM IST)
t-max-icont-min-icon

கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ‘திருக்கோவில்’ என்ற பெயரில் டி.வி. சேனல் தொடங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

சென்னை.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதி அனுமதி இல்லாமல் வேறு காரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் ரமேஷ் உள்பட பலர் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஆதி காலத்தில் கோவில்களை அரசர்கள் கட்டினார்கள். அந்த கோவில் சொத்துக்களையும், கோவில் நிர்வாகத்தையும் நிர்வகிக்க நிர்வாகிகளை நியமித்தனர். தற்போது அந்த பணியை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

கோவில் நிதியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. கட்டண தரிசனம் மூலம் கிடைக்கும் வருவாய் அறநிலையத்துறைக்கு வருவது இல்லை. அந்த தொகையை அந்தந்த கோவில் பராமரிப்புக்கு செலவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் 300 கோவில்களில் கிடைக்கும் உபரி வருவாய், பிற கோவில்களுக்கு செலவு செய்யப்படுகிறது.

கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ‘திருக்கோவில்’ என்ற பெயரில் டி.வி. சேனல் தொடங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. திருவேற்காடு கோவில் நிதியில் இருந்து அமைச்சர் ஒருவருக்கு கார் வாங்கியிருப்பதாக ஒரு மனுதாரர் குற்றம் சாட்டுவது தேவையற்றது. வழக்கில் தொடர்பு இல்லாத நபர்கள் மீது குற்றம் சாட்டுவது சரியானது இல்லை. எனவே, கோவில் நிதி கையாளுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை” என்று கூறியுள்ளார்.

Next Story