இந்தியா-இலங்கை உறவு சிறப்பாக உள்ளது தந்தி டி.வி.க்கு இலங்கை வெளியுறவு செயலாளர் பரபரப்பு பேட்டி


இந்தியா-இலங்கை உறவு சிறப்பாக உள்ளது தந்தி டி.வி.க்கு இலங்கை வெளியுறவு செயலாளர் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 20 Sept 2020 4:00 AM IST (Updated: 20 Sept 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான உறவு சிறப்பாக உள்ளது என்று தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் இலங்கை வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.

சென்னை,

இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பல வல்லரசு நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள தவித்து கொண்டிருக்க, இலங்கை வென்றதில் ரகசியம் என்ன?.

பதில்:- உலக அளவில் கொரோனாவை வென்ற நாடுகளில் இலங்கையும் ஒன்று. இன்றைய தேதிப்படி வெறும் 226 பேர் தான் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதமும் 93 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு என்பது வெறும் 0.3 சதவீதம் தான். தொற்றை தடுக்க ஆரம்ப கட்டத்திலேயே ராணுவத்தை நாங்கள் களமிறக்கினோம். ராணுவத்தின் திறனால், கட்டுப்பாடுகளை அமல்படுத்தி நோய்ப்பரவலையும் சிறப்பாக தடுக்க முடிந்தது.

கேள்வி:- சில நாடுகள், கொரோனா பெருந்தொற்றாக மாறியதற்கு சீனாதான் காரணம் என சொல்கிறார்கள். அது சரிதானா?.

பதில்:- இதுபோல் பழி சுமத்துவது சரியில்லை என்பது என் கருத்து. வைரஸ் எங்கே உருவானது? எப்படி பரவியது? என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. ஒரு வைரஸ் உருவாகி உலகம் முழுக்கவே பரவியிருக்கிறது. இது மட்டும் தான் கண்கூடான உண்மை. வைரசை ஒரு நாட்டுடன் தொடர்புபடுத்தி முத்திரை குத்துவது என்பது தவறு.

கேள்வி:- இலங்கை தேர்தலில் ராஜபக்சே அலை வீசி, ராஜபக்சே ஆட்சி அமைந்துள்ளது. இந்திய-இலங்கை உறவில் இதன் விளைவு என்ன?.

பதில்:- எல்லாவற்றிலும் ராஜபக்சேவின் அடையாளங்களை பொருத்தி பார்ப்பதை நான் ஏற்கவில்லை. இது மக்களின் அரசு. ராஜபக்சே அரசு என்று சொல்லும்போது அதற்கு பல உள்அர்த்தங்கள் கற்பிக்கப்படுகிறது. சிலர் ராஜபக்சே ஆட்சி என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு சார்பானது என அர்த்தம் கற்பிக்கிறார்கள். இது இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு.

கேள்வி:- இதன் தாக்கம் இலங்கை இந்திய உறவில் என்ன?.

பதில்:- 2015-ல் இந்திய-இலங்கை உறவில் ஒரு விதமான நம்பிக்கை குறைபாடு உருவானது. 2009 வரைக்கும் கூட இலங்கை-இந்திய உறவு நன்றாகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் இலங்கை மேல் இந்திய தலைவர்களுக்கு சந்தேகம் உருவாகி, இருநாட்டு உறவில் பிரச்சினைகள் உருவானது. 2015-ல் இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்தது. அந்த ஆட்சி மாற்றம் இந்தியாவின் விருப்பமாகவும் இருந்தது. ஏனெனில் அன்றைய ராஜபக்சே ஆட்சியை வேறு ஒரு நாட்டின் நேச ஆட்சியாக இந்தியா கருதியது.

கேள்வி:- 2015-ல் ராஜபக்சே ஆட்சியை மாற்ற இந்தியா விரும்பி, பணியாற்றியதா?

பதில்:- ஆமாம்... எப்படி அதற்கு முயற்சி செய்தார்கள் என்ற சரியான தரவுகள் என்னிடம் இல்லை. அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் இந்த கருத்தை இந்திய தலைவர்கள் மறுத்ததே இல்லை. இலங்கையில் ஆட்சி மாற்றம் 2015-ல் இந்தியாவின் விருப்பமாக இருந்தது உண்மை.

கேள்வி:- ஏன் ஆட்சி மாற்றத்தை இந்தியா விரும்பியது என கருதுகிறீர்கள்?.

பதில்:- வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் சீனாவோடு ரொம்பவே நெருக்கமாகிறோம் என இந்தியா கருதியது. 2 சீன நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்கு வந்து நிறுத்தப்பட்டதை இந்தியா ரசிக்கவில்லை. குறிப்பாக இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் அதை ரசிக்கவில்லை.

கேள்வி:- தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாகவே இது நடந்தது தானே?.

பதில்:- ஆமாம். 2014-ல் தான் இது நடந்தது. தேர்தலுக்கு முன்பாக 2 சீன நீர்மூழ்கி கப்பல்கள் வந்தன.

கேள்வி:- 2015-ல் ஏற்பட்ட கசப்பில் இருந்து இந்த உறவு மீண்டு வந்ததா?.

பதில்:- இந்த உறவு இப்போது மிக சிறப்பாக இருக்கிறது. இரண்டு நாட்டு தலைவர்களுக்கு இடையே நல்ல நட்புறவு மலர்ந்துள்ளது. 2 நாட்டு மந்திரிகள், அதிகாரிகள் இடையே இப்போது நல்லுறவு உள்ளது. நான் பார்த்தவரை இப்போது தான் இந்திய-இலங்கை உறவு மிகச்சிறப்பாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதவிர பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

Next Story