கொரோனா ஊரடங்கு காலத்திலும் ரூ.31,400 கோடி முதலீடுக்கு ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமி தகவல்


கொரோனா ஊரடங்கு காலத்திலும் ரூ.31,400 கோடி முதலீடுக்கு ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 20 Sept 2020 4:41 AM IST (Updated: 20 Sept 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு கால கட்டத்திலும் 31,400 கோடி ரூபாய் முதலீடு பெற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) ‘கனெக்ட் 2020’ மாநாடு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய முக்கிய உரை வருமாறு:-

அரசுக்கு கொள்கைகளை வகுத்தளிப்பதிலும், பல்வேறு சிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகத்தில் உருவாக்குவதிலும் ‘சி.ஐ.ஐ. கனெக்ட்’ தளமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கொரோனாவை எதிர்த்து தமிழக அரசு கடுமையாக போராடுகிறது என்பதற்கு, கொரோனா தொற்று மற்றும் அதனால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறைவதுமே சாட்சியாக உள்ளன.

பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், பரிசோதனைகளை கூட்டியது போன்றவற்றால் இது சாத்தியமாகியுள்ளது. இதுவரை 25 மாவட்டங்களுக்கு பயணித்து அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்துள்ளேன்.

தமிழகத்தில் பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக அனுமதித்து வருகிறோம். விரைவில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது உறுதி.

முதலீடுகளை கடந்த பல ஆண்டுகளாக ஈர்த்து வருகிறோம். கடந்த ஆண்டு நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் ஒப்பந்தங்கள் செய்துள்ள 81 நிறுவனங்கள் தங்களின் வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன. 191 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு பல்வேறு நிலைகளில் உள்ளன.

அதைத்தொடர்ந்து நான் அமெரிக்கா, அரபு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் மூலம் 63 தொழில் திட்டங்கள் ஈர்க்கப்பட்டு ரூ.19 ஆயிரம் கோடியளவில் முதலீடும், 83 ஆயிரத்து 300 வேலைவாய்ப்பும் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 69 ஆயிரத்து 712 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழகத்தில் கையெழுத்தாகியுள்ளன.

தொழிலை எளிதாக நடத்துவது, ஆன்லைனில் ஒற்றைச்சாளர வழியில் எளிதாக அனுமதி பெறுவது போன்றவற்றில் எனது தலைமையிலான அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது. அதன் மூலம் நல்ல நிர்வாகம் அளிக்கும் மாநிலங்கள் பட்டியலில் உயர்ந்த இடத்தை தமிழகம் பெற்றுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. புதிய கண்டுபிடிப்புகளின் கேந்திரமாகவும், அறிவின் தலைநகரமாகவும் மாநிலத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் எனது அரசின் நோக்கம்.

மக்களுக்கான மாநில அரசின் சேவைகளில் புரட்சிகளை ஏற்படுத்தும் விதத்தில் அறிவுசார் அடையாள அடிப்படையிலான சேவை வழங்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தும். இதற்காக மாநில குடும்ப தரவு தொகுப்பு மற்றும் “பிளாக் செயின்” என்ற நம்பிக்கை இணைய தொழில்நுட்பத்தை அரசு உருவாக்கும்.

இந்த முன்னோடியான முயற்சி, சில சேவைகளுக்காக அரசிடம் வந்து மக்கள் கோரிக்கை வைக்கும் நிலையை நீக்கிவிட்டு, மக்களிடம் அரசு செல்லும் நிலையை உருவாக்கும்.

பாரத்நெட் மற்றும் தமிழ்நெட் ஆகிய லட்சிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, தமிழகத்தின் 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளையும் குறைந்தபட்சம் 1 ஜி.பி.பி.எஸ். உயர் வேக இணைப்பு மூலம் இணைக்கப்படும்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்ப கேந்திரமாக தமிழகம் வலிமையான நிலையை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பயணத்தில் சி.ஐ.ஐ.யின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். பொருளாதாரம் மற்றும் தொழில் முன்னேற்றத்தில் தாக்கம் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தொழில் அமைப்புகளுடன் இணைந்திருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story