பொதுத்துறையில் சிறப்பாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமிக்கு விருது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


பொதுத்துறையில் சிறப்பாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமிக்கு விருது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 20 Sept 2020 5:12 AM IST (Updated: 20 Sept 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறையில் சிறப்பாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக பதிவுத்துறைத் தலைவர் ஜோதி நிர்மலாசாமிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) இணைந்து, 15-ந் தேதி முதல் 19-ந் தேதிவரை காணொலிக் காட்சி வாயிலாக கனெக்ட்-2020 என்ற மாநாட்டை நடத்தின.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதில் பங்கேற்று தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இணையப் பாதுகாப்பு கொள்கை-2020-ஐ வெளியிட்டார். இக்கொள்கை, மாநிலத்தில் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு மீறல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

அரசின் சமூக மற்றும் பொருளாதார நலத்திட்டங்களை இணையவழியில் நம்பகத்தன்மையுடன் கூடிய வெளிப்படையான முறையில் செயல்படுத்த, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான “பிளாக்செயின்” என்ற நம்பிக்கை இணையத் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு அரசுத் துறைகள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை-2020-ஐ அவர் வெளியிட்டார்.

இதன்மூலம், அரசின் மின்னாளுமைக்காக நம்பிக்கை இணைய கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், உலகளவில் மருத்துவ நோயறிதல், மருந்துப்பொருள் கண்டுபிடிப்புகள், சட்ட அமலாக்கம், ராணுவம், விண்வெளி, கல்வி, ஆளுமை, முதியோர் பராமரிப்பு போன்ற பல துறைகளில் மனித வாழ்க்கையோடு இணைந்து இயங்குகிறது.

இத்தொழில்நுட்பத்தை தமிழ்நாடு அரசுத் துறைகள் மக்களுக்கான இணையவழி சேவைகளை வழங்குவதில் பயன்படுத்திக் கொள்வதற்கான உத்திகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை -2020-ஐ முதல்-அமைச்சர் வெளியிட்டார். இதன்மூலம் வெளிப்படையான ஆளுமை மற்றும் வளர்ச்சி சார்ந்த இலக்குகளை தமிழ்நாடு எளிதாக எய்திட இயலும்.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது உள்பட பல்வேறு விருதுகளை தனியார் நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் வழங்கி கவுரவித்தார். பொதுத் துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்கான விருதை பதிவுத்துறைத் தலைவர் ஜோதி நிர்மலாசாமிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.விஜயகுமார், மின்னாளுமை ஆணையர் மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமைச் செயல் அலுவலர் சந்தோஷ் மிஸ்ரா மற்றும் சிடாக் நிறுவன இயக்குனர் கமாண்டர் எல்.ஆர்.பிரகாஷ், சி.ஐ.ஐ. தமிழ்நாடு பிரிவின் தலைவர் ஹரி தியாகராஜன், சி.ஐ.ஐ. கனெக்ட்-2020 தலைவர் சுரேஷ் ராமன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விருதை பெற்று ஏற்புரையாற்றிய ஜோதி நிர்மலாசாமி, பத்திரப் பதிவில் ஆள்மாறாட்டத்தை முற்றிலும் தடுப்பதற்காக ஆதார் நம்பரை பயன்படுத்தும் தொழில்நுட்ப சேவை வழங்கப்படும் என்று கூறினார்.

Next Story