சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர் மீண்டும் திறப்பு


சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 21 Sept 2020 6:17 AM IST (Updated: 21 Sept 2020 6:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர் பயணிகள் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளும் இ-பாஸ் கட்டாயமாக வாங்க வேண்டும். இல்லாவிட்டால் விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. 

விமான பயணிகளுக்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் இ-பாஸ் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு மாநில வருவாய் துறை அதிகாரிகள் பணியில் இருந்து விமான பயணிகளுக்கு இ-பாஸ்களை வழங்கி வந்தனர்.

கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்கள் இடையே பயணம் செய்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்தது. நேற்று முன்தினம் முதல் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் இயங்கி வந்த இ-பாஸ் கவுண்ட்டர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வரும் பயணிகள் ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பித்து பெற்று கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாயினர். மீண்டும் விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களை திறக்கவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் கோரிக்கையை ஏற்று நேற்று மாலை முதல் இ-பாஸ் கவுண்ட்டர்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் 2 நாட்களாக அவதிப்பட்டு வந்த வெளிமாநில பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Next Story