வாக்காளர் பட்டியலில் இரட்டை பெயர் பதிவை மாவட்ட வாரியாக கணினி மூலம் சரிபார்க்கும் பணி தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


வாக்காளர் பட்டியலில் இரட்டை பெயர் பதிவை மாவட்ட வாரியாக கணினி மூலம் சரிபார்க்கும் பணி தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 22 Sept 2020 3:45 AM IST (Updated: 22 Sept 2020 2:27 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் இரட்டை பெயர் பதிவை மாவட்ட வாரியாக கணினி மூலமாக சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செப்டம்பர் 20-ந் தேதி வரை 5 லட்சத்து 51 ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான 6-ம் விண்ணப்ப படிவத்தை 1 லட்சத்து 66 ஆயிரத்து 408 பேரும், பெயர் நீக்குவதற்கான 7-ம் விண்ணப்ப படிவத்தை 2 லட்சத்து 37 ஆயிரத்து 248 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலை கடந்த ஆகஸ்டு மாதம் இணையம் மூலமாக சரிபார்த்ததில் தமிழகத்தில் 56 ஆயிரம், ஒன்றிற்கும் மேற்பட்ட பெயர் பதிவுகள் இருப்பதை இந்திய தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது. அதை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, அதுபற்றி சரிபார்க்குமாறு தெரிவித்துள்ளது.

மேலும் மாதந்தோறும் இது போன்றவற்றை சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையம் தகவல் அனுப்பி வருகிறது. இதை தொடர்ந்து இரட்டை பதிவுகளை தற்போது கணினி மூலமாகவும் சரிபார்க்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றன.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்று கேட்டால், இதுகுறித்து மத்திய அரசுடன் இந்திய தேர்தல் ஆணையம் கலந்தாலோசித்து முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story