மின்சாரம், சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஆட்டோக்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


மின்சாரம், சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஆட்டோக்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Sept 2020 4:37 AM IST (Updated: 22 Sept 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தின்போது துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக ரூ.100 கோடி முதலீட்டில், சுமார் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் ‘எம்-ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது, ‘எம்-ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி’ நிறுவனம் ரூ.140 கோடி முதலீட்டில் சுமார் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய ஆட்டோக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஆட்டோக்களில் கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதி, ஆபத்து பொத்தான் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ‘எம்-எலக்ட்ரிக்’ ஆட்டோக்களின் ஓட்டுநர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அமைச்சர்கள், தொழில்துறை முதன்மைச்செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நீரஜ் மித்தல், ‘எம்-ஆட்டோ’ குழுமத்தின் தலைவர் அ.மன்சூர்அலிகான், நிர்வாக இயக்குநர் யாஸ்மின் ஜவஹர் அலி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story