ஆலந்தூர் சுவர் விளம்பர பிரச்சினை: பா.ஜ.க.வின் பூச்சாண்டி அரசியலை கண்டு அஞ்சமாட்டோம் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அறிக்கை


ஆலந்தூர் சுவர் விளம்பர பிரச்சினை: பா.ஜ.க.வின் பூச்சாண்டி அரசியலை கண்டு அஞ்சமாட்டோம் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 24 Sept 2020 3:03 AM IST (Updated: 24 Sept 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வின் பூச்சாண்டி அரசியலை கண்டு அஞ்சமாட்டோம் என்ற தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

சென்னை,

ஆலந்தூரில் சுவர் விளம்பரம் தொடர்பாக தி.மு.க.-பா.ஜ.க.வினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையையொட்டி, காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், ஆலந்தூர் தெற்கு பகுதியில் அடங்கிய நங்கநல்லூர் வோல்டாஸ் காலனியில் உள்ள தனியார் சுவரில் தி.மு.க.வினர் எழுதிய சுவர் விளம்பரத்தை 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் துணையோடு பா.ஜ.க.வினர் அழிக்க முயன்றதோடு தி.மு.க. வட்ட செயலாளர் நடராஜனை ஓட ஓட விரட்டி தாக்கியது சம்பந்தமாக பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் பகுதி செயலாளர் சந்திரன் தந்த புகார் மீது காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

50 ரவுடிகள் துணையோடு அராஜகம் செய்த பா.ஜ.க.வினர் மீது வழக்கு போடாமல், தி.மு.க. சுவர் விளம்பரத்தை அழித்ததை தட்டிக்கேட்ட வட்ட செயலாளர் மீது மட்டும் காவல் துறையினர் வழக்குபதிவு சிறையில் அடைக்க முயற்சித்தது எந்த விதத்தில் நியாயம்?.

நீதிமன்றம் இந்த வழக்கின் நீதி நியாயத்தை நிலை நாட்டியதற்காக தலை வணங்கி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எமெர்ஜென்சி நெருக்கடி நிலையையே கண்டு அஞ்சாமல் தைரியமாக எதிர்கொண்ட இயக்கம் தி.மு.க.. எனவே பா.ஜ.க.வினர் ரவுடிகள் துணையோடு ஆலந்தூரில் அராஜகம் செய்த பூச்சாண்டி அரசியலை கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம்.

இது பெரியார், அண்ணா, கருணாநிதி பிறந்து, காத்த புனித பூமி. பா.ஜ.க.வினர் இந்த ரவுடி அரசியலை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Next Story