ஐகோர்ட்டு உத்தரவை மீறி 100 சதவீத கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு


ஐகோர்ட்டு உத்தரவை மீறி 100 சதவீத கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 24 Sept 2020 4:15 AM IST (Updated: 24 Sept 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்தம் செய்த 9 பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து நீதிபதி விசாரணைக்கு எடுத்துள்ளார்.

சென்னை,

ஐகோர்ட்டு உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்தம் செய்த 9 பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து நீதிபதி விசாரணைக்கு எடுத்துள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 70 சதவீதத்தை வசூலித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

மேலும், 40 சதவீத கட்டணத்தை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் வசூலித்துக்கொள்ளவும், மீதி தொகையை பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்கு பிறகு வசூலிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

இதன்பிறகு முதல் தவணையை செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. இதில், 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. கோவை பி.எஸ்.பி.பி. மில்லேனியம் சி.பி.எஸ்.இ. பள்ளி, விருதுநகர் பி.எஸ்.சிதம்பர நாடார் சீனியர் செகன்டரி பள்ளி, விருதுநகர் சத்திரிய வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி. மெட்ரிக்குலேசன் பள்ளி, திருவொற்றியூர் ஸ்ரீசங்கர வித்யா கேந்திரிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் உசேன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 பள்ளிகள் ஐகோர்ட்டு உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தையும் செலுத்தும்படி பெற்றோரை வலியுறுத்தி உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த 9 பள்ளிகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள தாமாக முன்வந்து(சூமோட்டோ) கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார். பின்னர், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்கள் விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

விசாரணையின் போது சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை’ என தெரிவித்தார்.

இருந்தபோதிலும் நீதிபதி, குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர் புகார் அளிக்க முன்வர மாட்டார்கள் என்பதால் தனியாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதுகுறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் புகார்கள் பெறப்பட்டது குறித்து அக்டோபர் 14-ந்தேதிக்குள் சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ந்தேதி முடிவடைய உள்ள நிலையில், அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க நீதிபதி மறுத்து விட்டார்.

Next Story