கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு “பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது”


கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு “பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது”
x
தினத்தந்தி 24 Sept 2020 5:52 AM IST (Updated: 24 Sept 2020 6:32 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு 7 மாநில முதல்-மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

சென்னை,

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவின் நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிகமான பாதிப்புள்ள மாநிலங்களுக்கு நிபுணர் குழுக்களையும் மத்திய அரசு அனுப்பி ஆலோசனை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மராட்டியம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய 7 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றில் மாநிலங்களின் தற்போதைய நிலை, தயார் நிலை மற்றும் கொரோனா மேலாண்மை ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து 7 மாநில முதல்-மந்திரிகளுடன் கலந்துரையாடிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

நோய் அறிகுறிகளைக் கண்டறிவதிலும், கொரோனா நோய் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிவதிலும் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் தமிழ்நாடு பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆர்.டி.பி.சி.ஆர். சாதனங்கள் மூலம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், இறப்பு விகிதத்தை குறைப்பதிலும் பல நடவடிக்கைகளை தமிழ்நாடு எடுத்துள்ளதால் இறப்பு சதவீதம் மேலும் குறையும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மட்டும் நோய் அதிக அளவில் இன்னும் காணப்படுகிறது. எனவே, இதற்கு தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசின் ஆயூஷ் சஞ்சீவனி செயலியை தமிழ்நாடு சிறப்பாக பயன்படுத்தி தொலை மருத்துவ துறையில் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டின் அனுபவம் இந்தியாவிற்கே உதாரணமாக திகழ்கிறது.

இது நாட்டின் பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக திகழும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story