நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தை 30-ந்தேதி வரை வெளியிட கூடாது ஐகோர்ட்டு உத்தரவு


நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தை 30-ந்தேதி வரை வெளியிட கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Sept 2020 4:42 AM IST (Updated: 25 Sept 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படத்தை ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியிடும் நடவடிக்கையை வருகிற 30-ந்தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ என்ற திரைப்படம் விரைவில் ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு தடை கேட்டு டிரைடெண்ட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்ரமணியன், “நடிகர் விஷால், தமன்னா ஆகியோர் நடித்த ‘ஆக்‌ஷன்’ திரைப்படத்தை மனுதாரர் தான் தயாரித்தார். அந்த படத்தை தியேட்டரில் வெளியிடும் போது ரூ.20 கோடிக்கு குறைவாக வசூலானால், விஷால் சுமார் ரூ.8½ கோடி திருப்பித்தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த திரைப்படம், ரூ.20 கோடிக்கு மேல் வசூல் ஆகாததால், தயாரிப்பாளருக்கு, விஷால் தர வேண்டிய பணத்தை தரவில்லை. இதன்பின்னர், ஆனந்தன் என்ற இயக்குனர் மனுதாரர் ரவீந்திரனிடம் ஒரு கதையை சொல்லி அதை படமாக எடுக்க ஒப்பந்தம் செய்தார்.

ஆனால், அதே கதையை வைத்து சக்ரா என்ற பெயரில் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் மூலம் படம் எடுத்துள்ளார். அதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். எனவே இந்த திரைப்படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

மேலும், “சக்ரா திரைப்படத்தின் ‘டிரெய்லர்’ அண்மையில் வெளியானது. அதில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இயக்குனர் ஆனந்தன் மனுதாரரிடம் கூறிய கதையும், இந்த படத்தின் கதையும் ஒன்று” என்று கூறி, படத்தின் ‘டிரெய்லர்’ காட்சியை ‘பென்டிரைவ்’ மூலம் தாக்கல் செய்தார்.

மனுதாரர் தரப்பு வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கு ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட ‘பென்டிரைவை’ தன் கம்ப்யூட்டரில் போட்டு படத்தின் டிரெய்லர் காட்சியை பார்த்தார்.

அதன்பின்னர், சக்ரா படத்தை ஓ.டி.டி. இணையதளம் வாயிலாக வெளியிடும் நடவடிக்கையை வருகிற 30-ந்தேதி வரை மேற்கொள்ளக்கூடாது. தற்போதையை நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர், இந்த பிரச்சினையை இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலமாக சுமுக தீர்வு காண வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story