சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 231 பேர் சென்னை வந்தனர்


சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 231 பேர் சென்னை வந்தனர்
x
தினத்தந்தி 25 Sept 2020 6:21 AM IST (Updated: 25 Sept 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 231 பேர் சிறப்பு தனி விமானத்தில் சென்னை வந்தனர்.

ஆலந்தூர்,

சவுதி அரேபியா நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியா்களை அந்நாட்டு அரசு பிடித்து முகாம் காவலில் அடைத்து வைத்திருந்தது. முகாம் காவலில் இருந்தவர்களை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.

அதன்படி இந்திய தூதரக அதிகாரிகள், சவுதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 231 பேரையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் முகாம் காவலில் இருந்த 231 இந்தியா்களுக்கும் இந்திய தூதரகம் அவசரகால சான்றிதழ் வழங்கியது.

பின்னர் ரியாத்தில் இருந்து சவுதி அரேபியன் சிறப்பு தனி விமானத்தில் 231 இந்தியா்களும் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 140 பேர் பல்லாவரத்தில் உள்ள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

கேரளாவைச் சேர்ந்த 61 பேரும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச்சேர்ந்த 30 பேரும் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் சவுதி அரேபியாவில் நல்ல வேலை என்று கூறிய ஏஜெண்டுகளை நம்பி ஆயிரக்கணக்கில் பணத்தை கொடுத்து சுற்றுலா விசாவில் சென்று சட்டவிரோதமாக தங்கியவா்கள், போலி பாஸ்போா்ட்டுகளில் சென்றவா்கள், பாஸ்போா்ட்டுகளை தவறவிட்டவா்கள், விசா காலாவதியான பின்பும் அங்கு தங்கியிருந்தவர்கள் என கூறப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த 140 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதால் முகாமில் 14 நாள் தங்க வைக்கப்படுவார்கள். பின்னர் இவர்களில் யாருக்காவது குற்றப்பிண்ணனி உள்ளதா? என விசாரிக்கப்படும். குற்றப்பிண்ணனி இல்லாதவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story