அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்


அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்
x
தினத்தந்தி 26 Sep 2020 7:08 AM GMT (Updated: 26 Sep 2020 7:25 AM GMT)

தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை,

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அவரது ரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் எஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு, காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையில் எஸ்.பி.பி.யின் பண்ணை தோட்டத்தில் அவரது உடலை புதைப்பதற்கான முன்னேற்பாடுகள் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதிச்சடங்கு நிகழ்வின் போது நடிகர் விஜய் நேரில் வந்து எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.பி.பி.யை இறுதியாக ஒருமுறை காண்பதற்காக வந்திருந்த அவரது ரசிகர்கள், அவரது உடலை, காவல்துறை அணிவகுப்புடன் சுமந்து சென்ற போது, எஸ்.பி.பி.யின் புகழை போற்றும் விதமாக முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர். இதன் பின்னர் காவல்துறை சார்பில், 24 போலீசார் 3 முறை குண்டுகளை முழங்க அரசு மரியாதையுடன், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Next Story