நாக்பூரில் இருந்து விமானத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட தேசிய குத்துச்சண்டை வீரர்..!


நாக்பூரில் இருந்து விமானத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட தேசிய  குத்துச்சண்டை வீரர்..!
x
தினத்தந்தி 28 Sep 2020 7:16 AM GMT (Updated: 28 Sep 2020 7:16 AM GMT)

நாக்பூரில் இருந்து விமானம் பிடித்து வந்து வழிப்பறியில் ஈடுபட்ட தேசிய குத்துச்சண்டை வீரர் கும்பலோடு பிடிபட்டார்.

சென்னை

வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வழிப்பறி கும்பலோடு சேர்ந்து கொள்ளையனாக மாறிய தங்கப்பதம் வென்ற பாக்ஸிங் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காமலாபுரம்-பள்ளபட்டி பகுதி இடையே இருசக்கர வாகனங்களில் வருபவர்களை குறி வைத்து 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனங்கள், செல்போன்களை பறித்து செல்வது வாடிக்கையாக இருந்தது.

இது தொடர்பாக அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார்கள் உள்ளன. அதே போல, வத்தலக்குண்டு-நிலக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனங்கள், நகைகள் கத்தியைக் காட்டி இதே கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர் வழிப்பறிகளையடுத்து நிலக்கோட்டை டி.எஸ்.பி உத்தரவையடுத்து, சார்பு ஆய்வாளர் கண்ணா காந்தி தலைமையிலான தனிப்படை வழிப்பறி கும்பலை தீவிரமாக தேடி வந்தது. தொடர் தேடுதலுக்கு பிறகு வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட கதிரேசபிரபு , பாலமுருகன் , அரசராஜன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குல்லிசெட்டிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மைக்ரோ பயாலஜி பட்டதாரி ஆவார். இவர், நாக்பூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்., தேசிய அளவில் பாக்ஸிங் போட்டியில் பாலமுருகன் தங்கப்பதக்கம் வென்ற இவர் கொரோனோ தொற்று காரணமாக குல்லிசெட்டிபட்டிக்கு திரும்பியுள்ளார். சொந்த ஊரில் பாலமுருகன் கஞ்சா பழக்கத்து அடிமையாகியுள்ளார். இதனால், நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா வாங்க தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். 

திண்டுக்கல் பகுதியில் திருடும் இரு சக்கர வாகனம் ஒன்றை 36 மணி நேரத்தில் நாக்பூருக்கு ஓட்டி சென்று அங்கு மறைத்துத்திருப்பதும் விசாரணயில் தெரிய வந்தது. பிறகு, அங்கிருந்து விமானத்தில் ஊருக்கு திரும்பி வந்த பாலமுருகன் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளான்.

பிடிபட்டவர்களிடத்திலிருந்து 3 -செல்போன்கள், ஒன்றரை பவுன் நகை மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பாக்ஸிங் வீரர் பாலமுருகன் உள்ளிட்ட மூவரும் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.


Next Story