மாநில செய்திகள்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள் + "||" + 7th Announcement of Chief Ministerial Candidate

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்
அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றிய அறிவிப்பை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வருகிற அக்டோபர் 7-ந்தேதி வெளியிடுகிறார்கள்.
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இதற்காக தங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன. தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை செயற்குழு, பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது விதிமுறையாகும். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.


இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று காலை 10.15 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இதையொட்டி கட்சி அலுவலகம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. கட்சி அலுவலகத்துக்கு வெளியே கூடிய ஏராளமான தொண்டர்கள், வாழ்த்து கோஷங்களை எழுப்பிக்கொண்டு இருந்தனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

கூட்டம் தொடங்குவதற்கு ½ மணி நேரத்துக்கு முன்பாகவே செயற்குழு உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் கட்சி அலுவலக முதல் மற்றும் தரை தளத்தில் அமர வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. அழைப்பிதழ் கொண்டு வந்தவர்கள் மட்டுமே செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 10.08 மணிக்கு வந்தார்.

அவரது கார் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்ததும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ‘வருங்கால முதல்வரே’ ‘அம்மாவின் விசுவாசியே’ என்று கோஷமிட்டனர். மேலும் அவரது கார் மீது ரோஜா இதழ்களை தூவி, உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இறங்கியதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தொண்டர்களை பார்த்து வணக்கம் செலுத்தியபடி, கட்சி அலுவலகத்துக்குள் சென்றார். அப்போது அவருக்கு உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி காலை 10.10 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது தொண்டர்கள், ‘எப்போதும் முதல்-அமைச்சரே, சாமானிய முதல்-அமைச்சரே’ என்று கோஷமிட்டும், வாசகமாக எழுதப்பட்ட பதாகைகளை காட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தலைமை அலுவலகம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேராக கூட்டம் நடக்கும் இடத்துக்கு சென்றார்.

இதைத்தொடர்ந்து 10.15 மணிக்கு செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 276 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர், கட்சி வளர்ச்சிப்பணிகள், வேட்பாளர் தேர்வு, பொதுக்குழு, கட்சியின் வழிக்காட்டி குழு போன்றவை குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. மேலும் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் யாரும் கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

முதல்-அமைச்சர் வேட்பாளர் தேர்வு குறித்தும், வழிக்காட்டுதல் குழுவை அமைப்பது தொடர்பாகவும் செயற்குழு உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த பிரச்சினைகளில் உடனடியாக முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாலும், மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாலும் கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

காலை 10.15 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 2.45 மணி வரை 4½ மணி நேரம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும், கட்சி அலுவலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியே வந்து, காரில் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் அ.தி.மு.க. தலைமையில் இயங்குகின்ற கூட்டணி கட்சிகளின் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து வருகிற அக்டோபர் 7-ந்தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து, இதே தலைமைக் கழகத்தில் அறிவிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.