நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது - கமல்ஹாசன்


நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 30 Sep 2020 12:25 PM GMT (Updated: 2020-09-30T17:55:15+05:30)

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸ் விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 17 பேர் இறந்து விட்டதால், 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தினசரி விசாரணை நடந்து வந்தது. 350 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இறுதியாக, குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடந்தது. கொரோனா காலமாக இருப்பதால், பெரும்பாலானோர் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். தாங்கள் நிரபராதி என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.இம்மாத தொடக்கத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து,  இந்த  வழக்கில் இன்று தீர்ப்பளித்த லக்னோ சி.பி.ஐ. கோர்ட்,  குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. 

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டதீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து  டுவிட்டரில்  பதிவிட்டுள்ள அவர், நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது. என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story