இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு: முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரங்கல்


இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு: முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரங்கல்
x
தினத்தந்தி 30 Sep 2020 2:24 PM GMT (Updated: 30 Sep 2020 2:24 PM GMT)

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.  

இதையடுத்து, கடந்த 27-ம் தேதி மீண்டும் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை முடிவுவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராம கோபாலன்(94) சென்னையில் இன்று காலமானார். இதையடுத்து ராம கோபாலன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம. கோபாலன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (30.9.2020) இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

ராம. கோபாலன் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். ராம. கோபாலனை இழந்து வாடும், அவரது இயக்க தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ராம. கோபாலன் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் திரு.இராம கோபாலன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். திரு.இராம கோபாலன் அவர்களது பிரிவால்வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story