தர்மபுரி மாவட்டத்தில் கருப்பு கிரானைட் டெண்டரை இறுதி செய்யக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு


தர்மபுரி மாவட்டத்தில் கருப்பு கிரானைட் டெண்டரை இறுதி செய்யக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Sep 2020 9:30 PM GMT (Updated: 30 Sep 2020 6:16 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தர்மபுரி முன்னாள் எம்.பி., தாமரைச்செல்வன் தாக்கல் செய்துள்ள மனுவில், “தர்மபுரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் கருப்பு கிரானைட் அதிகம் உள்ளது. இதை எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பை மாவட்ட கலெக்டர் கடந்த ஜூன் 3-ந்தேதி வெளியிட்டார். அதில் டெண்டர் எடுப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 28-ந்தேதி என்று அறிவித்து இருந்தார்.

கருப்பு கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும். அதன்பின்னர் தான் மாநில அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என விதிகள் உள்ளது. ஆனால் இந்த விதிகள் எதையும் பின்பற்றாமல் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும். விதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.விடுதலை ஆஜராகி, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண், “அனைத்து விதிகளையும் பின்பற்றித் தான் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெண்டரை எடுப்பவர்கள் தான் சுற்றுச்சூழல் உள்ளிட்ட 6 அனுமதிகளைப் பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதில் விதிமீறல் எதுவும் இல்லை” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியதுள்ளதால், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை டெண்டரை இறுதி செய்யக்கூடாது’ என்று உத்தரவிட்டனர்.

Next Story