தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் இன்று முதல் அமல் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்


தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் இன்று முதல் அமல் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 1 Oct 2020 5:30 AM IST (Updated: 1 Oct 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ரேஷன் கடைகளையும் கணினி மயமாக்குவதற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும். இந்த திட்டம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டை ‘ஸ்கேன்’ செய்து அதன்மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து சோதனை அடிப்படையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 29-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் இன்று முதல் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருப்பூர், நெல்லை, தர்மபுரி, வேலூர், நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர், தேனி, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சீபுரம், திருவாரூர், வடசென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், சிவகங்கை, திண்டுக்கல், கடலூர் ஆகிய 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுதவிர தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 15-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இதனை முறைப்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். இந்திய நாட்டில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்பட்டதோடு, கடை ஒன்றிற்கு 5 சதவீத பொருட்கள் கூடுதலாக வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழக மக்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் முழுமையாக பயன்பெறுவார்கள்.

முதல் கட்டமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாநிலத்திற்கு செல்பவர்கள் அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இன்று பொதுமக்கள் அனைவரும் விரல் ரேகையை பதிவு செய்து தான் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

பயோமெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்திலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும், முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் என்ன செய்யலாம் என்பது தொடர்பாக முதல்- அமைச்சர் தெரிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரத்து 864 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் நியாய விலையில் வழங்கப்படுகிறது. இதில் 1½ கோடி ரேஷன் கார்டுதாரர் கள் மட்டுமே பொருட் களை வாங்குகின்றனர். சராசரியாக மாதந்தோறும் 3.30 லட்சம் டன் அரிசியும், கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்றவை தலா 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டன் வரை வினியோகம் செய்யப்படுகிறது. விரல் ரேகையை பதிவு செய்யும் கருவி பொருத்தும் பணி 32 மாவட்டங்களில் முழுமையாக முடிவடைந்து விட்டது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வருகிற 15-ந்தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும்.

ஆதார் கார்டை மையமாக வைத்து தான் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்டு உள்ளன. எனவே, ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள குடும்ப தலைவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர் யார் வந்து விரல் ரேகையை பதிவு செய்தாலும் உணவு பொருட்களை வாங்க முடியும். தமிழக அரசு அறிவித்தப்படி, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படும். பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் விரல் ரேகைகளை பதிவு செய்யும்போது, மத்திய அரசு அறிவித்தப்படி அரிசிக்கான கட்டணம் அவர்களிடம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story