இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மரணம்; திருச்சியில் இன்று உடல் அடக்கம்


இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மரணம்; திருச்சியில் இன்று உடல் அடக்கம்
x
தினத்தந்தி 1 Oct 2020 5:15 AM IST (Updated: 1 Oct 2020 4:33 AM IST)
t-max-icont-min-icon

உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.

சென்னை,

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வயது மூப்பு மற்றும் மூச்சு திணறல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில், கடந்த 28-ந்தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவரது உடலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், ராம கோபாலன் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவரது உடல் பொது சுகாதார பணியாளர்களிடம் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்கப்பட்டது. அவர் மரண செய்தியை அறிந்ததும் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். முக்கிய நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஆம்புலன்சுக்குள் கண்ணாடி பெட்டிக்குள் இருந்த அவரது உடல் அருகே யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அதனை தொடர்ந்து அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதேநேரத்தில் இந்து முன்னணி அலுவலகம் அமைந்துள்ள தெரு முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அந்த தெருவுக்குள் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது. சிந்தாதிரிப்பேட்டையில் பொது மக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

திருச்சி மாவட்டம் உறையூர் சீராப்தோப்பு, குழுமணி இந்து முன்னணி பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் அவரது உடல் இன்று (வியாழக்கிழமை) காலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட இருப்பதாக, இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் ஏ.டி.இளங்கோவன் தெரிவித்தார். கொரோனா தொற்று காரணமாக அவரது இறுதி சடங்கை சுகாதார பணியாளர்களே முன்நின்று நடத்த உள்ளனர்.

வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே ராம கோபாலன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் அவர் தங்கியிருந்து அமைப்பு பணிகளை கவனித்து வந்தார்.

நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தில் ராமசாமி-செல்லம்மாள் தம்பதிக்கு 5-வது மகனாக 1927-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி ராம கோபாலன் பிறந்தார். சென்னை வேப்பேரியில் உள்ள சி.என்.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ (ஏ.எம்.ஐ.இ.) படித்தார். மின்சாரத்துறையில் பணியாற்றிய அவர், 1945-ல் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார். ஆர்.எஸ்.எஸ். பிரசார குழு மாநில அமைப்பாளராக இருந்தார். திருமணம் செய்துக்கொள்ளாமல் தனது பொதுத்தொண்டை தொடர்ந்தார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் 1980-ம் ஆண்டு நடந்த மத மாற்ற பிரச்சினை சம்பவத்தை தொடர்ந்து இந்து முன்னணி என்ற அமைப்பை ராம கோபாலன் ஆரம்பித்தார். இதன் முதல் தலைவராக பி.தாணுலிங்க நாடார் இருந்தார். இந்து முன்னணி வளர்ச்சிக்காக ராம கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.

1984-ம் ஆண்டு மதுரை ரெயில் நிலையத்தில் இவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் வாழ் நாள் முழுவதும் வீர துறவியாக பணியாற்றி, வாழ்ந்து மறைந்துள்ளார், ராமகோபாலன்.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பு தலைவர்கள், மாணவ இயக்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story