திருச்சி அருகே இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் அடக்கம்


திருச்சி அருகே இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் அடக்கம்
x
தினத்தந்தி 2 Oct 2020 3:45 AM IST (Updated: 2 Oct 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே சீராத்தோப்பில் இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி,

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம கோபாலனுக்கு (வயது 94) கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னை ஆஸ்பத்திரியில் ராம கோபாலன் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் இரவோடு, இரவாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது.

நேற்று காலை ராம கோபாலன் உடல் திருச்சி அருகே சீராத்தோப்பு என்ற இடத்தில் உள்ள பாரத பண்பாட்டு கல்லூரி வளாகத்திற்கு வந்து சேர்ந்தது. முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் பல்வேறு ஆன்மிக அமைப்பை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் அணிந்த இந்து முன்னணி தொண்டர்கள் 4 பேர், அவரது உடலை அடக்கம் செய்யும் இடத்திற்கு எடுத்து சென்றனர். ராம கோபாலனை 15 ஆண்டுகளாக உடனிருந்து கவனித்து வந்த கன்னியாகுமரியை சேர்ந்த பத்மநாபன் இறுதி சடங்குகளை செய்தார்.

ராமகோபாலன் திருச்சி பகுதியில் சுற்றுப்பயணம் செய்ய வந்தபோதெல்லாம் சீராத்தோப்பில் தான் உருவாக்கிய பாரத பண்பாட்டு பயிற்சி கல்லூரி என்ற குருகுலத்தில் தங்குவதை தான் வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு திறக்கப்பட்ட இங்கு ஒரு பள்ளிக்கூடமும் இயங்கி வருகிறது.

தான் இறந்த பிறகு தனது உடலை, தான் உருவாக்கிய இந்த வளாகத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமென்பது அவரது இறுதி ஆசையாக இருந்து வந்தது. அந்த ஆசை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Next Story