நெசவாளர்களின் வாழ்க்கை ஏற்றம் பெற அனைவரும் கதர் ஆடையை பயன்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்


நெசவாளர்களின் வாழ்க்கை ஏற்றம் பெற அனைவரும் கதர் ஆடையை பயன்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Oct 2020 5:00 AM IST (Updated: 2 Oct 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

நெசவாளர்களின் வாழ்க்கை ஏற்றம் பெறும் வகையில் அனைவரும் கதர் ஆடையை பயன்படுத்த முன்வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“கதர் பயன்படுத்துவதால் மட்டுமே லட்சக்கணக்கான ஏழை மக்கள் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழிவகுக்கிறது” என்ற காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்தி, அவரது பிறந்த நாளான இந்த நன்னாளில், மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணை புரிய வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள நூற்போர் மற்றும் நெசவாளர்களை கொண்டு தற்கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினை பொருட்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 51 கதர் அங்காடிகளின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கி வருகிறது. கதர் நெசவாளர்களின் மேம்பாட்டிற்காக, கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலமாக கதர் வாரியம் மற்றும் சர்வோதய சங்கங்களில் பணிபுரியும் நூற்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, விபத்து, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, மூக்கு கண்ணாடி வாங்குவதற்கான நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

எளிமை மற்றும் தேசப்பற்றை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாசாரத்தையும் கதர் பிரதிபலிக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்படுத்தி, ஏழை, எளிய கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு சிறக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story