கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் திட்டமிட்டபடி தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் திட்டமிட்டபடி தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2020 4:44 AM IST (Updated: 2 Oct 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும், திட்டமிட்டபடி தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடர்பாக 2-10-2020 அன்று (இன்று) நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன” என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனை முதலில் அறிவிப்பு வெளியிட வைத்து பிறகு, “அரசு கொடுத்துள்ள கூட்டப் பொருள் தவிர, வேறு தீர்மானங்களை ஊராட்சித் தலைவர்கள் நிறைவேற்றக் கூடாது” என்று திருச்சி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநரை விட்டு உத்தரவு அனுப்ப வைத்து கபட நாடகத்திற்கான ஒத்திகை பார்த்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் யாரும் அஞ்சவில்லை என்பதால்; கடைசி முயற்சியாக, முதல்-அமைச்சரே தலையிட்டு, இப்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், நாளைய தினம் நடைபெற விருந்த கிராமசபைக் கூட்டங்களை அடிப்படையின்றி ரத்து செய்திருப்பதற்கு, அ.தி.மு.க. அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அவற்றைத் திரும்பப் பெறக்கோரியும், நாட்டில் எழுந்துள்ள எதிர்வினை அலைகளை ஒட்டி, நான் நேற்றைய தினம் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் அன்பு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் மத்தியிலேயே, அமோக ஆதரவு திரண்டு வருவதைத் தெரிந்து கொண்டுள்ள அ.தி.மு.க. அரசு, “சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும்” என்றுதான் இந்த “மிரட்டல்” முயற்சிகளில் எல்லாம் இறங்கியது.

ஏற்கனவே கொரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் “மே தினம்” மற்றும் “சுதந்திர தினம்” ஆகிய தேதிகளில் நடத்த வேண்டிய கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவில்லை. இப்போது அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ல் நடக்க வேண்டிய கூட்டத்தையும் ரத்து செய்திருப்பது, ஒரு ஜனநாயகப் பச்சைப் படுகொலை; பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கங்களை அடியோடு சிதைக்கும் அராஜகம்; ‘இந்திய நாட்டின் உயிர் மையம் கிராமங்களில்தான் உள்ளது’ என்றுரைத்த உலக உத்தமர் காந்தி அடிகளுக்குச் செய்யும் கடைந்தெடுத்த துரோகம்.

ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. அறிவித்த பணியை, நிச்சயம் செய்து முடிக்கும். ஆகவே ஏற்கனவே திட்டமிட்டபடி கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில் தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும், கிராம மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அவர்களிடம் அ.தி.மு.க. அரசின் அருவருக்கத் தக்க முகத்தை வேளாண் சட்டங்களை ஆதரித்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு அஞ்சி விவசாயிகளை அடிமையாக்கியுள்ள வஞ்சக நாடகத்தை, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கும் சிறப்பான கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரையும் மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story