தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
கொரோனா தடுப்பில் தமிழகம் தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகவும் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை. கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான பாடப்புத்தகங்கள் கூடுதலாகவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் புதிதாக 3.24 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்; அவர்களுக்கு பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது.
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இலவச மடிக்கணினி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது கொரோனா பரவல் காரணமாக தாமதமாகி வருகிறது.
தமிழகத்தில் மலைக்கிராமங்கள் உள்பட 52 பின்தங்கிய கிராமங்களில் இணையதள சிக்னல் கிடைக்காமல் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டு விரைவில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் 14 தனியார் பள்ளிகள் மீது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இதில் 5 பள்ளிகள் சரியான விளக்கம் அளித்துள்ளனர். மீதமுள்ள 9 பள்ளிகள் மீது நீதிமன்ற உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Related Tags :
Next Story