வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்; மக்கள் சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம பஞ்சாயத்துக்களில் கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இந்தநிலையில், திடீரென்று கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் தி.மு.க. வெற்றி பெற்றிருந்த பஞ்சாயத்துக்களில் நேற்று கிராமசபை கூட்டத்திற்கு பதிலாக மக்கள் சபை கூட்டமாக நடத்தப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் ஊராட்சி புதுச்சத்திரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்று, அந்த கிராம மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கிராமசபை கூட்டத்தை கூட்டக்கூடாது என்று இந்த ஆட்சி தடை விதித்தது. அதனால் தான் கிராமசபைக் கூட்டம் என்றில்லாமல் மக்கள் சபைக் கூட்டம் என்ற உணர்வுடன் நாம் இங்கு கூடியிருக்கிறோம். தடைகள் வந்தாலும் மக்கள் ஒன்று திரண்டு எங்கள் குறைகளைச் சொல்வோம் என்ற தெம்புடன் வந்திருக்கிறீர்கள். அதற்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திரமோடி கொண்டு வந்த 3 வேளாண் சட்டத்துக்கு எதிராக கிராம சபையை கூட்டி தீர்மானம் போடுங்கள் என்று நான் அறிவிப்புச் செய்தேன். வேளாண் சட்டத்தை எதிர்க்காமல் துணை நிற்கும் ஆட்சியாக அ.தி.மு.க. இருந்து வருகிறது. அதை எதிர்த்து நாம் குரல் கொடுத்து வருகிறோம். இன்றைக்கு ஊராட்சி முழுக்க கிராமசபைக் கூட்டத்தை நடத்துகிறோம்.
கொரோனாவிற்கு பயப்படுவதை விட தி.மு.க.வை பார்த்துத் தான் எடப்பாடி பழனிசாமி பயந்து கொண்டிருக்கிறார். மக்களுக்காகத் தான் போராடுகிறோம். சொந்தப் பிரச்சினைகளுக்காக இல்லை. இது கிராமசபை கிடையாது; மக்கள் சபை. உள்ளாட்சித் தேர்தலில் எப்போதும் ஆளும் கட்சிதான் அதிகமாக வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் எவ்வளவோ அநியாயங்கள், அக்கிரமங்கள் செய்தார்கள். அதையும் மீறி எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க தான் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.
தி.மு.க.வைச் சார்ந்த தலைவர்கள் மட்டுமல்ல; இது விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் பிரச்சினை என்பதால் அ.தி.மு.க.வைச் சார்ந்த தலைவர்களும் இந்த தீர்மானங்களை போடத் தயாராகிவிட்டார்கள். இந்தச் செய்தி முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு சென்றுவிட்டதால் இந்த கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்தியா முழுமைக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் அறப்போராட்டமாக, சட்டப் போராட்டமாக நடத்த வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டத்தை திரும்ப பெறும் வரை, சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்து போராடும்.
கொரோனா காலத்தில் அ.தி.மு.க. செயற்குழு நடக்கிறது. அமைச்சர்கள் தினமும் பேட்டி கொடுக்கிறார்கள். முதல்-அமைச்சர் ஊர் ஊராக ‘டூர்‘ போகிறார். ஆனால் கிராம சபை மட்டும் கூடக் கூடாது. அதாவது தி.மு.க. எதையும் செய்யக்கூடாது. இது ஒன்றுதான் உங்கள் நோக்கமா?. ஊரடங்கை நீட்டிப்பதே தி.மு.க.வுக்காகத்தானா?. மக்கள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தைப் படித்து விடுகிறேன். நீங்கள் அனைவரும் ஆமோதிக்கும் வகையில் கைகளை உயர்த்திக் காட்டுங்கள்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்த கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. விவசாய நலனையும், வேளாண் நலனையும் மனதில் கொண்டு இன்றைக்குக் கிராமப்புறங்களின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண் துறையைக் காப்பாற்ற இந்த கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எனவே இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒருமனதாக இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்பவர்கள் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் உங்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story