மேட்டுப்பாளையம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு


மேட்டுப்பாளையம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 Oct 2020 7:36 AM IST (Updated: 4 Oct 2020 7:36 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

கோவை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சத்தி மெயின் ரோட்டில், நேற்று இரவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரில் கோவை காளியகவுண்டன்பாளையத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 45), தொண்டாமுத்தூரை சேர்ந்த ராஜன், பிளிச்சி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் ஆகிய 4 பேர் இருந்தனர். இதில் அரவிந்த் என்பவர் காரை ஓட்டினார்.

இதேபோல சிறுமுகையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி மற்றொரு கார் ஒன்று சென்றது. இந்த 2 கார்களும் சிறுமுகை ரங்கம்பாளையம் அய்யப்பன் கோவில் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் கார்களில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு நோக்கி வந்த காரில் இருந்த அரவிந்த், ராஜன், மோகன்ராஜ், நவீன்குமார் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும் மற்றொரு காரில் இருந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்கள் யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை இந்த விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story