பிணவறையில் உடலை எலிகள் கடித்து குதறிய விவகாரம்: சுகாதாரப்பணிகள் இயக்குனர் விளக்கம் அளிக்க வேண்டும் மனித உரிமை ஆணையம் உத்தரவு


பிணவறையில் உடலை எலிகள் கடித்து குதறிய விவகாரம்: சுகாதாரப்பணிகள் இயக்குனர் விளக்கம் அளிக்க வேண்டும் மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 6 Oct 2020 12:25 AM GMT (Updated: 6 Oct 2020 12:25 AM GMT)

பிணவறையில் உடலை எலிகள் கடித்து குதறிய விவகாரம் பற்றி சுகாதாரப்பணிகள் இயக்குனர் விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 40). கொத்தனார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வேலையில் இருந்த போது மின்சாரம் தாக்கி மாடியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஆறுமுகத்தின் உடல் பிணவறையில் இருந்தபோது அவரது மூக்கு மற்றும் கால் பகுதியை எலிகள் கடித்து குதறி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தின் உடலை ஆஸ்பத்திரியில் இருந்து எடுத்து செல்லாமல் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து உடலை உறவினர்கள் எடுத்து சென்றனர்.

இதுகுறித்து கடந்த 3-ந் தேதி ‘தினத்தந்தி’யில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர்(பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து விசாரித்தார்.

பின்னர், இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் இயக்குனர், கள்ளக்குறிச்சி இணை இயக்குனர் ஆகியோர் 2 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

Next Story