மாநில செய்திகள்

வடமாநில தேர்வர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது எப்படி? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி + "||" + How do Northern candidates pass in Tamil? - Madurai Branch of the High Court Question

வடமாநில தேர்வர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது எப்படி? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

வடமாநில தேர்வர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது எப்படி? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி
வடமாநில தேர்வர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது எப்படி? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், நீலகிரி ஆயுத தொழிற்சாலையில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். அந்த வேலைக்காக வைக்கப்பட்ட தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் இந்த தேர்வில் அவரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்ற 6 பேருக்கு பணி வழங்கப்பட்டதாகவும், சரவணனுக்கு பணி நியமனம் செய்யப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, காலியாக உள்ள நீலகிரி தொழிற்சாலையில் 12 பணியிடங்களில் சரவணனுக்கு ஒரு பணியிடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி கிருபாகரன், நீதிபதி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அந்த பகுதிகளின் மொழிகளை அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அவற்றை அறிந்திருக்காத அதிகாரிகள் எல்லாம் பணியமர்த்தப்படுவதாகவும், இதில் அரசியல் உள்நோக்கங்கள் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில் இருக்கும் போது, தமிழ் மொழியில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது எப்படி? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “இந்தியாவில் உள்ளவர்கள் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை எழுதி எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரட்டும். ஆனால் தேர்வு முறையில் நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் தேவை” என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டு, வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் பணியமர்த்தப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதிகள் இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆயுத தொழிற்சாலை பணியிடத்திற்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வின் விடைத்தாள்கள், தேர்வு நடைபெற்ற 3 நாட்களில் அழிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு அழைக்கப்பட்ட 178 பேர்களின் விடைத்தாள்கள் உள்ளனவா? இல்லையா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 12 ஆம் தேதிக்கு ஓத்திவைத்தனர்.