தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கவில்லை - டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன இருப்பினும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கவில்லை என்று டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்துவிட்டநிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படவேண்டிய நிதியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. ஊரகப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளையும், மக்களுக்கான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்குவதில் தமிழக அரசு தேவையற்ற தாமதம் காட்டுவது ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித்தேர்தல்கள் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்கவேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் தாமதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் நடத்தப்பட்டன. அதிலும்கூட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள், சென்னை தவிர்த்து 27 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சித்தேர்தல்கள் மட்டும் தான் நடத்தப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட, அதனால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நன்மைகள் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய-மாநில அரசுகள் ஒதுக்காததுதான்.
கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல், வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட சிறப்பு வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தவேண்டும். அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கவேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்கீடுசெய்யவேண்டும். அதன்மூலம் கிராமங்களில் புதிய மறுமலர்ச்சியை அரசு ஏற்படுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story