நிதிநிறுவன கடனுக்கு வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை


நிதிநிறுவன கடனுக்கு வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 7 Oct 2020 3:09 PM IST (Updated: 7 Oct 2020 3:09 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதிநிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்ததால், விரக்தி அடைந்த விவசாயி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தாடிக்கொம்பு,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது இல்லை. அதற்கு பதிலாக தாலுகா அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனினும், கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் மக்கள் மனு கொடுக்க வருகின்றனர். இதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு, ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடைய கையில் மனுக்கள் அடங்கிய கவர் இருந்தது. கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்த போது, அந்த நபர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே பாதுகாப்புக்காக நின்ற போலீசார், விரைவாக சென்று அவரை தூக்கினர். அப்போது அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரை போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் பரிசோதித்த போது, அவர் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. மேலும் அவர் விஷம் குடித்ததால் இறந்ததாக டாக்டர் தெரிவித்தார்.

இதற்கிடையே அவர் கொண்டு வந்த கவரை கைப்பற்றி போலீசார் பிரித்து பார்த்தனர். அதில் ஆதார் அட்டை நகலுடன், புகார் மனுக்கள் இருந்தன. அதை கொண்டு விசாரித்ததில் இறந்தவர், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள காமக்காபட்டியை சேர்ந்த விவசாயி அர்ச்சுணன் (வயது 62) என்பதும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், திண்டுக்கல்லில் செயல்படும் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் அர்ச்சுணன் வீடு கட்டுவதற்கு ரூ.15 லட்சம் கடன் வாங்கினார். அதற்கு பல்வேறு தவணைகளாக ரூ.6½ லட்சம் செலுத்தி உள்ளார். இதற்கிடையே 3 தவணை தொகையை அவரால் திடீரென செலுத்த முடியாமல் போனது.

பின்னர் மீண்டும் தவணை தொகையை செலுத்த முயன்ற போது, கடன்தொகையை மொத்தமாக செலுத்தும்படி நிதிநிறுவனத்தினர் கூறியிருக்கின்றனர். மேலும் வட்டியுடன் சேர்த்து கூடுதல் தொகை செலுத்தும்படி நிதிநிறுவனத்தினர் அறிவுறுத்தினர். இவ்வாறு பணம் செலுத்தாவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று நிதிநிறுவனத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக கோர்ட்டிலும் அர்ச்சுணன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் வீடு ஜப்தி ஆவதை தடுக்க முடியாமல் மனமுடைந்த அவர், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார், என்றனர். நிதிநிறுவனத்தில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால், வீடு ஜப்தியாகும் நிலை ஏற்பட்டு விவசாயி தற்கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே அர்ச்சுணனின் மனைவி ராஜலட்சுமி மற்றும் மகன்கள் திண்டுக்கல்லுக்கு வந்து, அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.

Next Story