தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? நீதிபதிகள் கேள்வி


தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? நீதிபதிகள் கேள்வி
x
தினத்தந்தி 7 Oct 2020 11:44 AM GMT (Updated: 7 Oct 2020 11:44 AM GMT)

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?- ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சென்னை

தமிழகத்தில், கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம், பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 மேலும், அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் ஏஐசிடிஇ -க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது எனவும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

அரியர் தேர்வு ரத்துக்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் கல்வி விவரங்கள் கேட்கப்படும்-ஏற்கெனவே ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் பி.இ. படித்தவர்களே அதிகம் பணியாற்றுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பதிலளிக்க யுஜிசி, தமிழக அரசுக்கு நவம்பர் 20 வரை கால அவகாசம் அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Next Story