ஜெயலலிதாவின் லட்சிய அரசை மீண்டும் படைப்போம் - தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்
குருதியிலேயே உறுதி கலந்து உழைப்போம், புனித ஜார்ஜ் கோட்டையில் ஜெயலலிதாவின் லட்சிய அரசை மீண்டும் படைப்போம் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
2021-ம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆழமாய் வேர் விட்டு ஆயிரமாயிரம் கிளைகள் பரப்பி, பூத்து குலுங்குகிற இந்த பொன்மனத்து இயக்கத்தின் சார்பில் 2021-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் வேட்பாளராக உங்கள் அனைவரின் ஆசிகளோடு ஒருமித்த கருத்தால் நான் அறிவிக்கப்பட்டு இருக்கிறேன். உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதல்-அமைச்சராக வர முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமைச் சாமானியனை 1½ கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது. இதற்காக என் ஆயுளின் கடைசி வினாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்.
அனைவருக்கும் இவ்வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன். வெறும் எழுத்துகளால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்று விடாது. 2021-லும் 3-ம் முறையாக ஆட்சியைத் தொடர்கிற அரசியல் புரட்சியை தொண்டர்களாகிய உங்களின் ஒத்துழைப்போடு நான் நிறைவேற்றிக்காட்டுவேன் என்பது சத்தியம். என் மக்கள் எதற்காகவும், யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என்னும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிக் காட்டுகிற கடமை நம் முன்னே காத்திருக்கிறது. அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சியை மீண்டும் உருவாக்கி சரித்திரம் படைத்திடுவோம்.
இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் என்று இல்லங்கள் தோறும் வாக்காளர்களிடம் சென்று உரிமையோடு ஓட்டு கேட்கும் வாய்ப்பை உங்கள் விவசாயி வழிநடத்தும் அரசு, உங்களுக்கு வழங்கியிருக்கிறது. நாம் ஆற்றி வரும் தொண்டும், சேவையுமே மக்களின் இதயங்களில் நமக்கான இடத்தை உருவாக்கும் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
பழி பாவங்களுக்கு அஞ்சுபவனாக, கட்சியின் பெருமைக்கும், புகழுக்கும் மட்டுமே ஆசைபடுபவனாக, உங்கள் அன்புச் சகோதரனாக நான் உழைத்து வருகிறேன். இந்த இயக்கத்தில் அப்பனுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன், பேரனுக்கு பின் கொள்ளு பேரன் என்கிற வம்சாவளி அரசியல் கிடையாது.
நமது இலக்கும், நமது லட்சியமும் மக்களின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மட்டுமே உரியது. இதனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உழைக்கும் நம்மை தமிழக மக்கள் உளமார ஆதரிக்கிறார்கள். நாளையும் ஆதரிப்பார்கள். எனவே, நம்பிக்கையோடு நம் பாதங்களை முன்வைப்போம், பயணத்தை முன்னெடுப்போம்.
நாளைத் திருநாடு நமதடா, நாம் இனிமேல் தோளை சதைச்சுமையாய் தூக்கித் திரியோமே என்னும் திடத்தோடும், தீர்க்கத்தோடும் பாடுபடுவோம். பெட்டிப் பணத்தை கொட்டி வைத்துக்கொண்டு இரக்கமற்ற அரக்கத் தனத்தோடும், இரவல் மூளைகளோடும் அதிகாரப் பித்துப் பிடித்து அலைவோரை வென்றெடுக்க ஒற்றுமையாய் அரண் அமைப்போம். ஓர் குரலாய் அணி வகுப்போம். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என்னும் புரட்சித் தலைவரின் பொன்மொழிகளை மனதில் ஏற்று தினம் பாடுவோம்.
வழியெங்கும் வாகை நமக்காக காத்திருக்கிறது. திசையெங்கும் கிழக்காகும் தித்திப்பு காலம் நமக்காக பூத்திருக்கிறது. இதற்காக குருதியிலே உறுதி கலந்து உழைப்போம். 2021-ம் ஆண்டு ஜெயலலிதாவின் லட்சிய அரசை, புனித ஜார்ஜ் கோட்டையிலே மீண்டும் படைப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story